கந்தபுராணம் சூரபன்மன் வதைப்படலம் பாடல்கள் மற்றும் பதவுரை, பொழிப்புரையுடன் கூடிய நூல் வெளியீட்டு விழா 10.04.2017 திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நீர்வேலி கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் ஆலய பரிபாலன சபைத் தலைவர் த.நடராஜா தலைமையில் நடைபெறவுள்ளது. Thanks : laleesan sir
.
ஆலயப்பிரதம குரு அமரர் சுவாமிநாத இராசேந்திரக் குருக்களின் 17 ஆவது ஆண்டு நினைவு அர்ப்பணமாக ஆலயக் கந்தசட்டி உற்சவ கொடியேற்ற உபயகாரர் ஆகிய சிதம்பரநாதர் வல்லிபுரம் குடும்பத்தாரால் இந்நூல் வெளியிடப்படுகின்றது.
.
நிகழ்வில் வரவேற்புரையை ஆலய பரிபாலன சபைச் செயலாளர் க.மகாலிங்கசிவமும் ஆசியுரைகளை நீர்வேலியின் குருமூர்த்தங்களான பிரம்மஸ்ரீ ஆ.சந்திரசேகரக் குருக்கள், பிரம்மஸ்ரீ கு.தியாகராசக் குருக்கள், பிரம்மஸ்ரீ சா.சோமதேவக் குருக்கள் ஆகியோரும் அருளுரையை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளும் வாழ்த்துரைகளை சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம், சைவப்புலவர் ஏ.அனுசாந்தன், மாதர்சங்கத் தலைவி ருக்மணி ஆனந்தவேல் ஆகியோரும் வழங்குவர்.
.
அமரர் சுவாமிநாத இராசேந்திரக் குருக்கள் நினைவுரையை செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் ஆற்றுவார். கந்தபுராணம் சூரபன்மன் வதைப்படலம் குறித்த வெளியீட்டுரையை செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசனும் நயவுரையை கலாபூஷணம் பிரம்மஸ்ரீ ப.சிவானந்தசர்மாவும் (கோப்பாய் சிவம்) ஆற்றுவர். ஆலயப் பரிபாலனசபைப் பொருளாளர் சி.தயாநாதன் நன்றியுரை நல்குவார்.
.
அமரர் சுவாமிநாத இராசேந்திரக் குருக்கள் நீர்வேலிக்கு அடையாளமாகக் குருபாரம்பரியத்தின் சிறப்பை நிலை நிறுத்திய சிவாச்சாரியப் பெருமகனாகத் திகழ்ந்தவர். 22.04.1925 இல் பிறந்த இவர் 20.12.2000 ஆம் ஆண்டில் இறையடி சேர்ந்தார்.
கந்தபுராணத்தில் நிறைந்த ஆட்சிபெற்ற இவர் புராணபடனத்திற்குப் பயன்சொல்வதில் வல்லவராகத் திகழ்ந்தார். முற்போக்கு இலக்கியவாதியாகத் திகழ்ந்த கவிஞர் இ.முருகையன் உள்ளிட்ட பலர் இவருடன் புராணபடத்தில் பங்கேற்கும் காட்சி இன்றும் நீர்வை ஊரவர்களின் மனக்கண்களில் தெரியும் பசுமைக் காட்சி ஆகும்.
இவரிடம் நூல் கட்டினால் தீராத நோயும் தீரும் என்ற நம்பிக்கை குடாநாட்டின் பல பாகங்களிலும் வாழ்ந்த அன்பர்களிடம் இருந்தது. இதனால் இவரை நாடி பரிகாரம் தேடிய பலர் இருக்கின்றனர்.
.
கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதனை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவந்து தனது வீட்டில் தங்க வைத்து யாழ்ப்பாணத்திற்கு அறிவொளி பாய்ச்சுவதிலும் குருக்கள் பெரும்பங்கு வகித்தார்.
.
நீர்வேலி கந்தசுவாமி கோவிலின் கந்தசட்டித் திருவிழா திருச்செந்தூர்ப் பாணியில் இடம்பெறக் காரணமானவர் குருக்கள் ஐயா ஆவார். இங்கு கந்தசட்டி காலத்தில் மகோற்சவம் நடைபெறுகின்றது. முதல்நாள் கொடியேற்றமும் 5ஆம் நாள் விசுவரூப தரிசனமும் 6 ஆம் நாள் நண்பகல் வேல் வழங்கும் காட்சியும் மாலை சூரன் போரும் 7 ஆம் நாள் தீர்த்தத் திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் 8 ஆம் நாள் திருக்கல்யாணமும் நடைபெறுகின்றது.