ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள்

புராதனம்மிக்க இவ்வாலயம் இற்றைக்கு முந்நூறு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகும். நீர்வேலிக் கிராமத்தின் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட ‚அம்மன் ஆலயம்‛ என்ற பெருமைக்கும், சிறப்பிற்கும்
உரிய ஆலயமாகும். இதனாலே தான் இவ்வாலயம் ‚பழைய அம்மன் கோயில்‛ என அழைக்கப்படுகின்றது.
இந்திய தமிழ் நாட்டு மாவண்டூரிலிருந்து இலங்கைக்கு வந்த விஸ்வப்பிராமண குலத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ சிங்கப்பச்சாரியாரின் சிரேஷ்ட வழித்தோன்றலாகிய ஸ்ரீலஸ்ரீ பராக்கிரம சிங்காச்சாரியாரின் ஏழாந் தலைமுறை மகனார் சமஸ்கிருத
வித்துவானும், தமிழ்ப் பாண்டித்தியம் பெற்ற புலவருமான ஸ்ரீலஸ்ரீ விநாகச்சாரியரே அன்னை ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு இங்கு ஆலயம் அமைத்த பெருமைக்குரியவராவார்.
குறிப்பிட்ட விநாயகச்சாரியாருக்கும், மகன் ஆறுமுகச்சாரியாருக்கும் உரித்தான ‚சங்கணவைக்கடவை‛ என்னும் காணியில் கிழக்குப் பக்கமாக அமைந்திருந்த இரும்பு வேலைசெய்யும் கம்மாலயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திலே திடீர் திடீர் என ஒரு தீப்பொறி தோன்றி மறைந்தது. இதைக்கண்டு அதிசயித்த வினாயகச்சாரியாருக்கு கேட்கும் வகையில் ‚தானே அங்கு தீப்பொறியாகக் காட்சியளித்ததெனவும் தனக்கு
அந்த இடத்தில் ஓர் ஆலயம் அமைத்து வழிபடும்படியும் அசரீரி மூலம் தெரிவிக்கப்பட்டது. அதற்கமைய இந்தியாவிலிருந்து கருங்கல்லாலான விக்கிரகம் ஒன்று தருவிக்கப்பட்டு ஆகம விதிகளுக்கமைய அவராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகமும் செய்யப்பட்டு பூசை வழிபாடுகளும் செய்யப்
பட்டு வந்தன. அன்றைய அந்த விக்கிரகமே இன்னும் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகமும் பூசைகளும் நடை பெற்று வழிபாடு செய்து வருகின்ற சிறப்பிற்குரியதாகும்.

குறித்த ஸ்ரீலஸ்ரீ வினாயக ஆச்சாரியார் சிவகதியடைந்த பின்னர் அவரது மூத்த மகனார் தமிழ் சமஸ்கிருத சங்கீத நாடகபோதனாசிரியர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகாச்சாரியார் தனது இளைய சகோதரரான நன்னியாச்சாரியாரின் உதவியுடன் தொடர்ந்து பூசாகருமங்களையாற்றிவந்த சிறப்புக்குரியவராவர்.

இவ்வாலய சூழலிலேயே இருந்த ஆறுமுகாச்சாரியாரின் கம்மாலயத்திலே தான் சங்கீத விற்பன்னரான வேலுப்பிள்ளை ஆச்சாரியாரால் அக்காலத்தில் நீர்வேலியில் வாழ்ந்த அரிஅரிவட்டர் என்னும் பெரியாரால் மக்களுக்கேற்பட்ட அம்மை,
பொக்களிப்பான், பேதி என்னும் கொடிய நோய்களிலிருந்துமக்களைக் காப்பாற்றுவதற்காக நீர்வேலி வாய்க்கால் தரவைப் பிள்ளையார் மேல் பாடப்பட்டு இயற்றப்பட்ட வசந்தன்காவியத்திற்கு தாள மமைத்துப் பயிற்சியும் வழங்கப்பட்டமை
பிரசித்திவாய்ந்த சிறப்புக்குரியதாகும்.
காலநீரோட்டத்தில் இற்றைக்கு நூறு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட சிற்றாலய கட்டங்கள்எல்லாம் பழுதடைந்த காரணத்தினால் அக்கட்டடங்கள் எல்லாம் முற்றாக நீக்கப்பட்டு வடக்குவாயிலாக கர்ப்பக்கிரகம்,
அர்த்தமண்டபம், சபாமண்டபம், தரிசனமண்டபம் என நான்கு மண்டபங்களோடு கூடிய விசாலமான ஆலயம் அமைக்கப்பட்டது.

புதிய ஆலயத்தில் பங்குனி உத்தர நட்சத்திரத்தில் ஆகமமுறைப்படி கும்பாபிஷேகம் செய்யப்பெற்றது. தொடர்ந்து வருடாவருடம் பங்குனி உத்தர மணவாளக்கோலம், நவராத்திரி, திருவெம்பாவை, வைகாசிப்பொங்கல் என்பனவும் காலத்துக் காலம் அன்னதான நிகழ்வுகளும், வசந்தன் நிகழ்வுகளும் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாலயத்திற் கென விஸ்வகலாமணிப் பண்டிதர் இ.சி. கந்தையா ஆச்சாரி
யார் (வறுத்தலவிளான்) அவர்களால் ஆக்கப்பெற்ற திருவூஞ்சல் பதிகங்கள்பாடி திருவூஞ்சல் ஆட்டுதல் நிகழ்வுகளும் இடம்பெற்றன. இவ் ஊஞ்சல்பாக்கல் கை தவறிவிட்டன.இவ்வாலயத்துக்குப் பக்கத்தில் பாரிய ஆலமரம் ஒன்று
கிளைகள் பரப்பி, விழுதுகள் ஊன்றி ஆலய தலவிருட்சமாக நின்றமை சிறப்பம்சமாகும். இதனால் இவ்வாலயம் ‚ஆலடியம்மன் கோயில்‛ எனவும் வழங்கப்படுகின்றது. இந்த ஆலமரத்தின் அடிப்பாகத்தில் மேற்குப்புறமாக பெரிய திருவாசி போன்றஓர் அமைப்பு இயற்கையாகவே அமைந்திருந்தது. இவ்விடத்
தில் அம்பிகை தரிசனத்தைக்கண்டு வழிபட்டவர்களும் மேலும் இந்த இடத்தில் பொங்கல் பூசைகள் செய்து வழிபாடாற்றியும் வந்துள்ளார்கள். குறிப்பாக ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாராச்சாரியார் சுவாமிகளின் மகள் பூரணம்பிள்ளை இந்த ஆலயத்தொண்டுகளில் தன்னை ஈடுபடுத்தியதோடு, குறித்த ஆலமரத்தடியிலே
பொங்கல், படையல் செய்து வழிபாடாற்றிவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பிட்ட ஆலமரம் பட்டழிந்து நீண்டகாலமாகியும் அதனை நினைவுகூரும் வகையில் தற்போதுள்ள சபாமண்டப பண்டிகையில் கிழக்கு நோக்கியிருக்கும் அம்பாள் விக்கிரகத்தோடு ஆலமரக்கன்றும் நின்று சான்றுபகர்வது‚ஆலடியம்மன் கோவில்‛ என்பதை நிரூபிப்பதாகவும், அம்பாள் அதை விரும்புவதாகவும் அமைந்துள்ளது. காலச்சக்கரம் சுழன்று செல்கையில் நன்னியாச்சாரி
யாரின் புதல்வர்களாகிய காசிப்பிள்ளையும் சின்னத்தம்பியும் அவர்களின்பின் காசிப்பிள்ளையின் புதல்வர்களாகிய பொன்னம்பலமும், செல்லையாவும் கோயிலை நிர்வகித்து வந்துள்ளனர். இக்காலப்பகுதியில் ஆலய பூசாகருமங்களை
விஸ்வப்பிராமணர்களாக வாழ்ந்த கந்தர் கதிரவேலு என்பவரும், அவரைத்தொடர்ந்து 1934ம் ஆண்டு முதல் 1938ம் ஆண்டுவரை சமூக சேவையாளரும், சைவாசாரசீலரும், விஸ்வப்பிராமணருமாகிய சின்னப்பு தர்மலிங்கம் ஆச்சாரி அவர்களும் ஆற்றி
வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களைத் தொடர்ந்து நீர்வேலியில் வாழ்ந்த சிவப்பிராமணரான குருக்கள் திலகம் கதிரேசக்குருக்கள்தியகாராசக்குருக்கள் (வியாபாரி ஐயர்) என்பவரை பூசகராக
நியமித்து பூசாகருமங்கள ஆற்றிவந்தமை மறக்கமுடியாததாகும்.
காலப்போக்கில் வடக்கு வாயிலாகவிருந்த ஆலயக்கட்டிடங்கள் பழுதடைந்தமையால் அவை முற்றாக நீக்கப்பட்டு அம்பாளின் அறிவுறுத்தலுக்கமைய இவ்வாலயம் மீண்டும்
தெற்கு வாயில் கோயிலாக அமைக்கப்பட்டது. 1971இல்ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலய கட்டடவேலைகளான கர்ப்பக்கிரகம், பண்டிகை, ஏனைய அர்த்த மண்டபம், சபா மண்டபம்,இந்தியாவிலிருந்து வருகை தந்த சிற்பவல்லுனர் பெரியசாமி ஆச்சாரி
யார் அவர்களின் மேற்பார்வையில் அக்காலத்தில் ஆலயத்தை பரிபாலனஞ் செய்த காசிப்பிள்ளை செல்லையா அவர்களினதும், அவரது சகோதரி குஞ்சிப்பிள்ளையின் மகனும்,செல்லையாவின் மகள் காமாட்சியம்மாவின் கணவருமான கந்தையா கணேசையா அவர்களினதும் அனுசரணையுடனும், காலஞ்சென்ற சிவக்கொழுந்து நடேசன் (ஓவசியர்) அவர்களினதும், மற்றும் அன்பர்களினதும் அயராத முயற்சியால் கட்டப்பட்டு 1974ம் ஆண்டு பங்குனி மாத உத்தர நட்சத்திரத்தில்
நீர்வேலி அரசகேசரிப்பிள்ளை கோவில் பிரதமகுருக்கள்
சாதாசாரக் கிரியாமணி சிவஸ்ரீ கா.சாம்பசதாசிவக்குருக்கள்
தலைமையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

கொடிய வெப்ப காலமான பங்குனி மாதத்தில் இக்கும்பாபிஷேகம் செய்து முடிந்ததும் வானவர்களும் தேவர்களும் இக்கும்பாபிஷேகத்தை ஆசீர்வதித்து வாழ்த்துவது போன்று யாரும் எதிர்பாராதவிதமாக இடியுடன் கூடிய பெருமழைபெய்து
அனைத்தையும் குளிர வைத்தது சிறப்புமிக்க செயற்பாடு இன்றும் மறக்கமுடியாத சிறப்பம்சமாகும். அன்று தொடக்கம்1982ம் ஆண்டுவரை ஆலய பூசாகருமங்களை குறிப்பிட்ட குருக்களின் மகன் சோமதேவசர்மா அவர்களே ஏற்று செய்து
வந்தமையும் அவர் இன்று புகழ்பெற்ற குருக்களாகத் திகழ்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

1982ம் ஆண்டுமுதல் 2005ம் ஆண்டு வரையுள்ள காலப்பகுதியில் ஆலய பூசா
கருமங்களையாற்ற பிரம்மஸ்ரீ தி. குமாரசதாசிவசர்மா அவர்கள் நியமிக்கப்பட்டு ஆற்றி வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
1994ம் ஆண்டு இவ்வாலயத்தில் பங்குனி உத்தரமண வாளக்கோலத்திருவிழாவின்போது வித்தகன் தெய்வக்கவிமணி
தெட்சணாமூர்த்தி கோபாலசிங்கம் அவர்களால் இயற்றப்பட்ட திருவூஞ்சல் பதிகம் பாடி ஊஞ்சலாடியபோது அந்தராகத்துக்கும் தாளத்துக்கும் ஏற்ப ஆதிமூலத்தில் அம்பிகையின் இருமருங்கிலும் ஒளிவீசிக் கொண்டிருந்த சரவிளக்குகளும் தாமாக
அசைந்தாடி அந்த ஊஞ்சற்பதிகத்தை அம்பாள் ஏற்றுக்கொண்டதாக அந்த திருக்காட்சியைக் காட்டியுள்ளார். அடியார்கள் எவரும் எதிர்பாராதவிதமாக நடைபெற்ற இத்திருக்காட்சி அடியவர்கள் அனைவரது உள்ளங்களையும் கொள்ளை
கொண்டு பக்திப்பரவசத்தில் ‚அரோகரா‛ என்னும் நாமம் ஒலிக்கச்செய்தது இவ் அம்பிகையின் அருட்செயல் மேலும் சிறப்பைத்தரும் செயற்பாடாக அமைந்துள்ளது.

இவ்வாண்டுமுதல் சிவராத்திரி தினத்தில் நான்கு சாமப் பூசைகளும், நவராத்திரி, திருவெம்பாவை, விநாயகர் சதுர்த்தி என்பனவும் வைகாசிப்பொங்கலும் சிறப்பாக நடைபெற்றுவருவதோடு கந்தசஷ்டி உற்சவகாலத்தில் இவ்வாலயத்துக்கு அண்மையிலுள்ள அருள்மிகு செல்லக்கதிர்காமசுவாமி கோயில் முருகப்பெரு
மான் இக்கோவிலுக்கு எழுந்தருளி சூரன்போருக்காக அன்னை
யிடம் ‚சக்திவேல்‛ பெற்றுச் செல்லும் செயலும் ஆலயத்துக்கும் சூழலுக்கும் சிறப்பான செயற்பாடாக அமைந்துள்ளது.

1995ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரணநிலை காரணமாக மக்களெல்லாரும் இடம்பெயர்ந்து செல்ல ஏற்பட்ட எறிகணைத் தாக்குதல்களினால் ஆலயத்தில் ஏற்பட்ட சேதங்களை மக்கள் மீளக்குடியர்ந்தபோது 1996ம் ஆண்டு திருத்தவேலைகள்
செய்து புனரமைத்து புதிதாக நந்தி பலிபீடமும் பிரதிஷ்டை செய்யப்பட்டதோடு வைரவர் கோயிலும் அமைக்கப்பட்டது. முன்னைய மடப்பள்ளி பழுதடைந்தமைகண்டு ஆலயத்தோடு நெருங்கிய தொடர்புடைய திரு. சிவக்கொழுந்து தியாகராசா
அவர்கள் தமது பங்களிப்பாக புதிய மடப்பள்ளி யொன்றை அமைத்துக் கொடுத்துள்ளார்கள். கோயிலின் கிழக்குப்புற வீதியும் விசாலிக்கப்பெற்று
அதற்கான சுற்றுமதிலும் கட்டப்பட்டது. இப்படியாகப் புனருத்தாரணம் செய்யப்பட்ட கோவிலுக்கு 1998ம் ஆண்டு ஆவணி மாதம் (24.08.1998) உத்தர நட்சத்திரத்தில் புனரா வர்த்தன கும்பாபிஷேகம் செய்யப்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
1998ம் ஆண்டு இவ்வாலயம் அரசாங்கத்தால் HA/5/JA/761 இலக்கத்தில் பதிவுசெய்யப்பட்டு பரிபாலன சபையால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து ஆலய சுற்றுப்பிரகாரத்திற்கு மதில் கட்டிமுடிக்கப்பட்டது. பின்னர் அழகானதும் விசாலமானதுமான வசந்த மண்டபம் காலம்சென்ற கந்தையா இராசரத்தினம் அவர்களின் மருமகன் பிரான்ஸ் வாழும் திரு.கு.சிவராசா அவர்களால் கட்டப்பட்டது. சுற்றுப்பிரகாரத்தில் பிள்ளையாருக்கான ஆலயம் தெட்சணாமூர்த்தி கோபால
சிங்கம் அவர்களால் கட்டி கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. முருகனுக்குரிய தனி ஆலயம் ஆ.செல்வரத்தினம் குடும்பத்தினரால் கட்டப்பட்டது. 2008ம் ஆண்டு கொடித்தம்பம் விஸ்வலிங்கம் ஜெகதீஸ்வரன் (ஜெயம்) அவர்களினால்
நிர்மானிக்கப்பட்டது. இவ்வாண்டு ஆலயத்திற்கான புதிய சித்திரத்தேர் வேலைகள் தைப்பூச தினத்தன்று ஆரம்பிக்கப்பட்டு 24.05.2010 வெள்ளோட்டவிழா நடைபெற்றது. இத்தேருக்கான தரிப்பிடம் ஜேர்மனியில் வாழும் த.சண்முகதாஸ் என்பவரால் வழங்கப்பட்ட காணியில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இவராலும் சகோதரராலும் ஆலயத்திற்கான மணிக்கோபுரம் கட்டப்பட்டுள்ளது. அன்பர்களின் நிதி உதவியுடன் உள்மண்டப ஒருபகுதி வேலைகளும் ராஜகோபுரமும் அமைக்கப்பட்டுள் ளமை ஆலய
வரலாற்றில் சிறப்பு அம்சமாகும்.

இத்திருப்பணி நிறைவேற அயராது பாடுபட்ட பரிபாலனசபையார், மற்றும் நிதியுதவி வழங்கியவர்கள் அனைவருக்கும் அம்பிகையின் பேரருள் கிடைக்கப் பிரார்த்திக் கின்றோம்.
தற்போது ஆலய பூசாகருமங்களை ஆற்றப் பிரம்மஸ்ரீ இ.நகுலேஸ்வரக்குருக்கள் நியமிக்கப்பட்டு ஆற்றி வருவது
குறிப்பிடத்தக்கதாகும்.