நீர்வேலி மேற்கு கரந்தன் சிவநாகபூஷணி அம்பாள் கோயில்

நீர்வேலிக் கிராமத்தின் மேற்குப் பகுதியில் கரந்தன்வீதியின் அருகில் ‚குக்குறுமான்‛ என்னும் காணியில் அமைந்ததே இக்கோயிலாகும். ஆரம்பத்தில் இக்காணிக்குள் நின்ற வேப்பமரத்தின் அடியில் வீற்றிருந்து பாம்பு வடிவத்தில் காட்சி தந்த நாகபூஷணி அம்பாளை விளக்கேற்றி வழிபாடாற்றி வந்தனர்.

குறித்த காணியின் சொந்தக்காரரான இராசரத்தினம் அன்னலட்சுமி என்பவரது கனவில் தோன்றி ‚தன்னை ஓர் இடத்தில் முறைப்படி பிரதிஷ்டை செய்து வழிபடும்படி‛
கூறியதற்கமைய 05.02.1997இல் அத்திவாரமிட்டு ஆலய அமைப்பு வேலைகள் செய்து 12.05.1997இல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அன்றுமுதல் தினசரி ஒருநேரப் பூசை
நடைபெற்று வருகின்றது. சிறப்பாக நவராத்திரி விழா நடைபெற்று வருவது
குறிப்பிடத்தக்கது. நவராத்திரியின் கடைசி நாளான மானம்பூ தினத்தன்று நீர்வேலி, கோப்பாய், உரும்பிராய்க் கிராமங்களின் எல்லையில் அமைந்துள்ள சிவபூதநாதேஸ்வராயர் கோயிலிருந்து சிவபூதநாதேஸ்வரப் பெருமான் எழுந்தருளி
இவ்வாலயத்தில் மகிடாசூர சம்மாரம் செய்யும் நிகழ்ச்சி இவ்வாலய சூழலுக்கே பெருமை தரும் ஒரு சிறப்பு அம்சமாகும். தினசரி காலையில் 5-30 மணிக்கு ஆலயமணி ஒலிக்கச் செய்யும் நிகழ்ச்சி இப்பகுதி மக்களின் முயற்சிக்கு உயர்ச்சி
தரும் விடயமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாமும்
நாகபூசணி அம்மையின் அருளை வேண்டுவோமாக.