காமாட்சியம்பாள் கோவில்

நீர்வேலி வடக்கில் நீர்வேலி புன்னாலைக்கட்டுவன் வீதியோரமாக நீர்வேலிச் சந்தியில் இருந்து சுமார் ¾ மைல் தூரத்தில் அரசும் வேம்பும் தலவிருட்சமாக அமைந்துள்ள
இடத்தில் கண்பன்புலம் என்னும் பதியில் கோயில் கொண்டெழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றது இவ்வாலயம்.

மேற்படி அம்பாள் அன்றொரு நாள் ஆலய பரிபாலகரான அமரர் சின்னப்பு தர்மலிங்கம் அவர்களின் சொப்பனத்தில் தோன்றி “நீண்டகாலமாக என்னைத் தாயென மதித்து தொண்டு செய்து வழிபட்டு வந்த நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் இப்போ என்னைக் கவனிக்காது, ஆதரிக்காது விட்டுவிட்டீர்கள். ‚நான் உங்கள் இடத்திலேயே இருக்கப் போகிறேன்” எனக் குறிப்பிட்ட இடத்தையும் சுட்டிக்காட்டி மறைந்துவிட்டார்.
1947ஆம் ஆண்டு இக்கோயிலுக்கான மூலஸ்தானம், அர்த்தமண்டபம், சபாமண்டபம், மகாமண்டபம், தரிசன மண்டபம் எல்லாம் அமைக்கப்பட்டதோடு மடைப்பள்ளி,
களஞ்சிய அறை என்பனவும் 1948இல் திருமஞ்சனக்கிணறும் அமைக்கப்பட்டது.
1950இல் இக்கோவிலுக்கான விக்கிரகங்கள் எல்லாம் செய்யப்பட்டன. இவையெல்லாம் முடிந்திருந்தும் என்னும் வாக்கியத்துக்கமைய 1956ஆம் ஆண்டு துர்முகி வருஷம் வைகாசி மாதம் 29ஆந் திகதி (11.06.1956) திங்கட்
கிழமை புனர்பூச நட்சத்திரத்திலே நீர்வேலியில் வாழ்ந்து காலஞ்சென்ற குருக்கள் திலகம் சிவஸ்ரீ க. தியாகராசக்குருக்கள் (வியாபாரி ஐயர்) அவர்களால் மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இக்கோயிலுக்குரிய காணியை 1950ஆம்
ஆண்டு (புரட்டாதி) செப்டம்பர் 13ஆந் திகதி பிரசித்த நொத்தாரிஸ் டேவிட் இராசதுரை முகதாவில் 1500ஆம் இலக்க உறுதி மூலமும் கோயிலின் பரிபாலனத்துக்காக கோயில் முன்றலில் அமைந்திருந்த கடைக்கட்டிடத்தை 1959ஆம்
ஆண்டு (பங்குனி) மார்ச் 22ஆந் திகதி பிரசித்த நொத்தாரிஸ் த. சச்சிதானந்தன் முகதாவில் 2097ஆம் இலக்க உறுதி மூலமும் காலஞ்சென்ற சகோதரர்களான சின்னப்பு கனகசபை,சின்னப்பு தம்பிப்பிள்ளை, சின்னப்பு தர்மலிங்கம் ஆகிய மூவரும் தர்மசாதனம் செய்துள்ளனர். மேலும் கேயில் தேவைக்காக கோயிலின் தெற்குப் பக்கமுள்ள தனது காணியிலிருந்து உத்தரவுபெற்ற நில அளவையாளர் ச. நிர்மலேந்திரன் அவர்களால் அளந்து வரையப்பட்ட பட இல. 1372இன் படி
13.693குழி நிலத்தை தர்மலிங்கம் பரராசசிங்கம் அவர்கள் 2013 பெப்ரவரியில் தர்ம நன்கொடையாக வழங்கியுள்ளார். கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து ஆலய பூசாகருமங்களை விஸ்வப்பிராமணராக விளங்கியவரும், ஆலய தர்மகர்த்தாவுமாகிய
காலஞ்சென்ற சின்னப்பு தர்மலிங்கம் அவர்களே செய்துவந்தனர்.

அக்காலத்தில் கோயிலில் திருவெம்பாவை, நவராத்திரிப் பூசைகளும், மாதாந்தப் பௌர்ணமி தினங்களில் அன்னதானமும் நடைபெற்றதோடு திருவாதவூரடிகள் புராணபடனம்,சித்திரபுத்திரர் கதை என்பனவும் உரியமுறைப்படி படித்துப்
பயன் சொல்லப்பட்ட நிகழ்வு மறக்க முடியாத ஒன்றாகும்.
5.8.1963இல் அசையா மணியும் மணிக்கோபுரமும் அமைக்கப்பட்டன.  இவ்வாலயத்தில் 1970ஆம் ஆண்டு தை மாதம் திருவோண நட்சத்திரத்தில் ‚மகாவிஷ்ணுமூர்த்தி‛ பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கிராமத்திலேயே முதன்முதலாக மகாவிஷ்ணு வழிபாடு ஏற்படுத்தப்பட்டது இங்கேதான் என்பது
கிராமத்தின் புகழில் இடம்பெறவேண்டிய அம்சமாகும்.

23.2.1974இல் ஆலய பரிபாலகர் சின்னப்பு தர்மலிங்கம் அவர்கள் இறைபதம் அடைந்தமையால் பூசாகருமங்களை ஆற்ற கிரியாமணி குமார தியாகராசக்குருக்கள் அவர்கள் நியமிக்கப்பெற்று ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காலப்போக்கில் ஆலயக்கட்டிடங்கள் பழுதடைந்திருந்தமையால் முழுவதும் இடித்து மீண்டும் அதே இடத்தில் 19.01.1987இல் அத்திவாரமிடப்பட்டு அம்பிகையின் பேரருளினாலும் அடியார்களின் அயராமுயற்சியினாலும் அழகிய புதிய
கோயில் மூலஸ்தானம், அர்த்தமண்டபம், சபாமண்டபம், மகா
மண்டபம், தரிசன மண்டபம், மணிக்கோபுரம் ஆகியவைகளுடன் பிள்ளையார், முருகன், வைரவர் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சன்னிதானங்களும்.
மகாவிஷ்ணுவிற்கு ஆலய சுற்றுப்பிரகாரத்துக்கு வெளியே வடக்குப்புறமாக தனி ஆலயமும் அமைக்கப்பட்டு சுக்கில வருஷம் தை மாதம் 25ஆந் திகதி புனர்பூச நட்சத்திரத்தில் (07.02.1990) மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இக்கும்பாபிஷேகத்திற்கு நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கோயில் பிரதம குருக்கள் சிவஸ்ரீ சாம்பசதாசிவக்குருக்கள் அவர்கள் பிரதம குருக்களாகவும் நீர்வேலிக்
கந்தசுவாமி கோயில் பிரதம குருக்கள் சிவஸ்ரீ சுவாமி இராசேந்திரக் குருக்கள் சர்வ போதகராகவும் விளங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் சுற்றுப்பிரகாரத்தில் நடேசர், அர்த்தநாரீஸ்வரர்,சண்டேஸ்வரி ஆகிய மூர்த்தங்களும் பிரதிஷ்டை பண்ணப்பட்டு 20.03.2005 பங்குனி அனுச நட்சத்திரத்தில் வண்ணைவெங்கடேஸ்வர ஆலய பிரதமகுரு ஸ்ரீவத்ஸ வரதராசேஸ்வரக்குருக்கள் தலைமையில் பஞ்சகுண்ட கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இப்பகுதியில் அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு நடைபெறும்ஆலயம் என்னும் சிறப்புடையது.அம்பிகையின் அருளூட்டத்தினால் வித்தகன் தெட்சணாமூர்த்தி கோபாலசிங்கம் அவர்களினால் ‚திருவூஞ்சல் பதிகமும் பஜனைப் பாடல்களும்‛ பாடப்பெற்றன. புத்தூர் பாவலன் காலஞ்சென்ற பெ.சின்னப்பு ஆச்சாரி அவர்களால் அம்பாள் பேரில் பக்திப் பதிகம் ஒன்றும் பாடப்பெற்றுள்ளது. காலத்துக்
குக் காலம் சமயப்பிரசங்கங்களும் மாணவரிடையே சமய அறிவுப்பரீட்சைகளும் நடைபெற்று வருகின்றன.

கும்பாபிஷேக தினத்தை இறுதிநாளாக வைத்து பன்னிரண்டு தினங்கள் அலங்கார உற்சவமும் உற்சவ கடைசி நாளன்று கப்பல் திருவிழாவும் நடைபெறுகிறது. இப்பகுதியில் கப்பல் திருவிழா நடைபெறும் கோயில் என்னும் சிறப்பு இக்கோவிலுக்கு
உண்டு. மாசிமக தினத்தன்று சங்காபிஷேகம், அன்னதானம் என்பனவும் பங்குனித் திங்கள், சோமவாரத் திருவிழாக்களும், நவராத்திரி, திருவெம்பாவை, கேதாரகௌரி விரதபூசை என்பனவும் நடைபெற்று வருகின்றன. இவ்வாலயம் சமய வளர்ச்சிக்குத் தொண்டாற்றி வருவது கிராமத்தின் புகழில் இடம்பெறும் ஓர் அம்சமாகும். மேலும் கிருஷ்ணஜயந்தி விழா வும் சுவர்க்கவாயிலேகதசியும் நடைபெற்று வருகின்றது. அம்பிகை அருள் அனைவர்க்கும் கிடைக்கப் பிரார்த்திப்
போமாக.