நீர்வேலி கந்தசுவாமி கோயில்

நீர்வேலி கந்தசுவாமி கோயில் – ஆலய வரலாறு

cropped-sam_3975-1-1.jpgநீர்வேலியின் தெற்குப் பகுதியில் அடியார்களின் அல்லல் அகற்றி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு கந்தசுவாமி ஆலயம் அமைந்திருக்கின்றது. கடம்பவிருட்சத்தை தலவிருட்சமாகக் கொண்டமைந்த இவ்வாலய வரலாற்றைப்
பற்றி ஆராயுங்கால் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நீர்வளமும், நிலவளமும் மக்கள் வளமும் கொண்ட இக்கிராமத்திலிருந்து கந்தயினார் என்ற பெயருடைய பெரியார் ஒருவர் கதிர்காமக்கந்தப் பெருமானைத் தரிசிக்கும் வேட்கை
மிக்கவராய் அங்கு மகோற்சவம் நிகழும் காலமாகிய ஆடித்திங்களில் புறப்பட்டு பாதயாத்திரையாகச் சென்றபோது வழியிலே மதங்கொண்ட யானையொன்று அவரைத்துரத்த அவர் காட்டிற்குள் ஓடி வழிதுறை தெரியாது அலையலானார்.
இறுதியில் களைப்பும் பசியும் மிகுந்தவராய் மரம் ஒன்றின் கீழ் நித்திரையில் ஆழ்ந்திருந்த வேளையில் அவர்முன்னால் துறவி ஒருவர் தோன்றி ‚வேல் ஒன்றை அவர் கையிற் கொடுத்து இதனைத் துணையாகக் கொண்டு செல் நீ கதிரமலைக்
கந்தனைச் சென்றடைவாய்‛ என்று கூறிச் சிறிதுதூரம் வழியுங்காட்டி மறைந்தருளினார். அவர் காட்டியவழியிற் சென்று ஆராமையோடு கதிர்காமக் கந்தனைத் தரிசித்து மீண்ட கந்தயினார் துறவியாற் பெற்ற வேலாயுதத்தை நீர்வேலி யிலே தாபித்துச் சிறியதோர் ஆலயத்தையும் தோற்றுவித்தார்.
இவ்வாலயம் வேற்கோட்டமென அழைக்கப்படலாயிற்று.

நீர்வேலியில் தாபிதமான வேற்கோட்டத்திலே கிரமமாகப் பூசைகளும் புராணபடனங்களும் நடைபெற்று பக்தியைப் பெருக்கும் சமய பிரசங்கங்களும் நடைபெறும். இறை பக்தியைப் பெருக்கும் நிலையமாக அமைந்து வரலாயிற்று.
இந்நிலையிலே தென்மராட்சிப்பகுதியில் கொடிகாமம் என்னும் இடத்தில் கந்தப்பெருமானுக்கு ஆலயம் ஒன்று அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு கந்தசுவாமி விக்கிரகம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தும் பிரதிஷ்டை செய்யப்படாதிருந்தது. ஏதோ தடைநிலவிய வேளையில் குறித்த விக்கிரகம் அவ்விடத்து அடியவர் ஒருவரின் இல் லத்தில் நெற்கூடையினுள்
மறைத்துவைக்கப்பட்டிருந்தது. அந்தவிக் கிரகத்தை நீர்வேலிக் கிராமத்தைச் சேர்ந்த முருகபக்தர்கள் கந்தயினார், நல்லயினார் என்னும் இருவர் சிறிது பணம் கொடுத்துப்பெற்று வந்து வேற்கோட்டம் அமைந்த இடத்திலிருந்து 300 யார் தொலைவில் 1852இல் ஆலயம் அமைத்து அங்கு குறித்த விக்கிரகத்தை
முறையாகப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகமும் இயற்றுவித்தனர்.

வேற் கோட்டத்திலிருந்த வேலாயுதமும் புதியஆலயத்தில் குடி புகுந்தது. குறித்த கந்தயினார், நல்லயினார் என்னும் இருசகோதரர்களால் 1852இல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பரிபாலனஞ் செய்யப்பட்டு வந்த இவ்வாலயம் 1896இல் மூவர் கொண்ட தர்மகர்த்தா சபையாலும்| 1896இல் அறுவர் கொண்ட தர்மகர்த்தா சபையாலும்| 1918இல் அறுவர் கொண்ட சபையாலும் பரிபாலனஞ்செய்யப்பட்டு வந்தது. 1968இல் புதிய பரிபாலன சபையொன்று தோற்றம்பெற்று ஆலய பரிபாலனத்தைச் சிறப்
பாகச் செய்து வருகின்றது. ஆலய முகப்பில் ஈசான திசையில் கந்தப்பெரு
மானுக்கு உகந்த கடம்ப விருட்சம் தலவிருட்சமாக அமைந்திருக்கும் சிறப்பு ஆலயத்துக்கு மிகவும் சிறப்புத் தருவதாகும்.

சித்திரைப் பௌர்ணமியை தீர்த்த திருவிழாவாகக் கொண்டு ஆரம்பத்தில் 10 நாள் மகோற்சவமும் 1924இல் மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டதிலிருந்து 19 நாள் மகோற்சவமும் நடைபெற்று வருகின்றது.

யாழ்ப்பாணத்திலே வடமொழி, தென்மொழி ஆகம இதிகாசங்கள் யாவற்றையும் ஐயந்திரிபுறக்கற்றுணர்ந்த நீர்வேலி ஸ்ரீலஸ்ரீ சிவசங்கர பண்டிதர் அவர்களால் 1830இல் ஆரம்பித்து வைக்கப்பட்ட புராண படனமானது இன்றும் இவ்வாலயத்தில் நடைபெற்று வருவதுகுறிப்பிடத்தக்கது. நீர்வேலிக் கிராமம் கந்தபுராண கலாசாரம் நிறைந்த சிறப்பிற்குரியது. நீர்வேலிக் கந்தசுவாமி கோவிலில் 1830இல் ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதர் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட கந்தபுராண படனம் மரபு தவறாது இன்றும் நடைபெற்று வருவது பழமை பேணப்படுவதோடு கந்தபுராண கலாசாரத்தை இன்றும் மக்கள் பேணிவருவதை எடுத்துக்காட்டுகின்றது. முதலியார் அத்தியார் அருணாசலம் அவர்களும் இந்தக் கந்தபுராண படனத்தை ஒழுங்கான முறையில் நடைபெறச் செய்த பெருமைக்குரியவர் உபயகாரர் இல்லாதவேளை
யில் தானே அந்த உபயத்தை ஏற்று வழுவின்றிப் புராணபடனம் நடைபெற உழைத்த பெருமைக்குரியவர் பண்டிதர்வேலுப்பிள்ளை அவர்கள் புராண படிப்பில் ஈடுபட்டதோடு மேற்படி கோவிலில் பண்டித வகுப்பை நடாத்திய பெருமைக்கு
ரியவர். மேலும், இவர்களைத் தொடர்ந்து பண்டிதர் சேதுகாவலர், நீசி. முருகேசு, பே. தம்பiயா, சிதம்பரநாதன் ஆகியவர்கள் இப்பணியில் தம்மை ஈடுபடுத்தியவர்கள் இன்றுநினைவுகூரப்பட வேண்டியவர்களே. இங்கு நடைபெறும் புராணப்படிப்பைக் கேட்க அயற்கிராமங்களிலிருந்தும் குறிப்பாக வரணியிலிருந்தும் மக்கள் வந்துபோவது சிறப்பானதாகும். புராண படிப்பு முடிந்ததும் அன்னதானம் கொடுக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகின்றது. இவ்வழக்கம் பிடியரிசி மூலம் அரிசி சேகரிக்கப்பட்டு அன்று ஆரம்பிக்கப்பட்டதை நினைவுகூர வேண்டியதாகும். இன்றும் அன்னதானம் வழங்கப்பட்டு வருவது இப்பகுதி மக்களின் பழமைபேணும்
பழக்கத்தை நிலைநாட்டுவதாகவும் விருந்தோம்பலை எடுத்துக்
காட்டுவதாக அமைந்துள்ளது.

மேலும், இவ்வாலயத்துக்கு முருகப்பெருமானுக்கு உகந்த சித்திரத்தேர் ஒன்று ஆகம, சிற்ப விதிகளுக்கு அமைய உருவாக்கப்பட்டு அதில் வள்ளி, தெய்வ யானை சமேத
முருகப்பெருமான் ஆரோகணித்து துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனஞ் செய்யும் சிறப்பைக் காணாத கண்களும் கண்களா? மேலும் பிள்ளையார், சிவன் ஆகியவர்களும் தனித்தனி சித்திரத்தேர் அமைக்கப்பட்டு திருவீதி உலாவருவது
சிறப்பானதாகும்.

இவ்வாலயத்தில் விநாயகர், சிவலிங்கம், உமாதேவி,
சிவகாமி சமேத நடேசப்பெருமான், மூலவரான வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகப்பெருமான், வைரவர், பழனியாண்டவர் ஆகிய மூர்த்திகளுக்குச் சந்நிதானங்களும், நவக்கிரக வழிபாட்டாலயமும் அமைந்த பேராலயமாக இவ்வாலயம் விளங்குகின்றது.
ஈழத்தில் சிறந்து விளங்கும் இவ்வாலயத்தில் சித்திரை மாதத்தில் வருடாந்த மகோற்சவமும், மற்றும் மாதாந்த உற்சவங்களாக வைகாசி விசாகம், ஆனி உத்தரம், ஆடிப்பூரம்,ஆவணிச் சதுர்த்தி, ஆவணி மூலம், புரட்டாதிச் சனிக்கிழமை
கள், நவராத்திரி, ஐப்பசி வெள்ளி, கந்தசஷ்டி, கார்த்திகை சோமவாரம், குமராலய தீபம், மார்கழித் திருவாதிரை, தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்தரம் என்பவற்றோடு நடேசரபிஷேகம், நால்வர் குருபூசை என்பனவும் நடைபெற்று வருகின்
றன. மேலும் கதிர்காம உற்சவத்தின் போது விசேட அபிஷேகஆராதனைகளும், கந்தசஷ்டி உற்சவ காலங்களில் கொடியேறித் திருவிழா நடைபெறும் ஆலயமாக விளங்குவது சிறப்பு அம்சமாகும். மேலும், வேட்டைத் திருவிழாவின் போது ஊரின்
தெற்கெல்லையில் அமைந்துள்ள பழம் பெருமைமிக்க நாச்சிமார் கோயிலடியில் சுவாமி வேட்டையாடி வருவது மிகவும் சிறப்புடையதாகும்.

இவ்வாலய வடக்கு வீதியில் பூங்கொல்லையும், தென்கிழக்குப் பக்கத்தில் தீர்த்தக்கேணியும், தீர்த்தக் கேணியின் பக்கத்தில் சுவாமி இளைப்பாறும் மண்டபமும்,
தீர்த்தக்கேணியின் ஒரு புறத்தில் பழனிமலை போன்ற அமைப்பின் மேலமைந்த கோயில் கட்டத்தில் ‚பழனி யாண்டவர்‛ கோயிலும், அமைந்துள்ளமை ஆலயத்துக்கு மேலும் சிறப்புத் தருவதாயமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீர்வேலி பிராமணன் குடியிருப்பு மக்கள் கந்தசுவாமி கோயில் பரிபாலனத்தார் ஆகியவர்களுக்கும் கோப்பாய் வடக்கில் அமைந்த பிராம்பத்தை, பிராமண ஓடைப்பகுதி மக்களுக்கும் நீண்டகாலமாக திருமணபந்தத் தொடர்பு, காணி
பூமி கொடுக்கல்வாங்கல் தொடர்பு, பராமரிப்புத் தொடர்புகள் இருந்து வந்திருக்கின்றது. இது இன்றும் நிலைத்திருப்பது சிறப்பிற்குரியதே. மேலும் குறிப்பாக வேட்டைத்திருவிழாவின்போது வேட்டையாடிவிட்டு இலுப்பையடிப் பிள்ளையார் கோவிலில் கிரம பரிகாரம்செய்து இளைப்பாறிவிட்டு பண்டிதர் வேலுப்பிள்ளை அவர்களால் அமைக்கப்பட்ட எல்லை மானப்பந்தலில்வரவேற்கப்படுவதும், அங்கு சிறப்பாக உபசரிக்கப்படுவதும்இன்று மறக்கமுடியாத சம்பவமாகும். இது நீர்வேலி
பிராம்பத்தை மக்களின் உறவைப்பலப்படுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளது சிறப்பானதே.இது நீர்வேலிக் கந்தசுவாமி ஆலய வேட்டைத்திருவிழா
மற்றும் மகோற்சவ உபயங்களை தொடர்புபடுத்தி நிற்பது உறவைப் பலப்படுத்துவதாக அமைகின்றது.
காலத்துக்குக் காலம் சமய பிரசங்கங்களும், புராணபடனங்களும், சமய வகுப்புகளும், சமய மலர் வெளியீடுகளும் நடைபெற்று வருவது சிறப்பிற்கரியனவாகும்.

இவ்வாலய பூசா கருமங்களை ஆரம்பகாலத்தில் சுப்பையாக் குருக்களும், அவரின் பின் அவர்தம் பரம்பரையினரும் சிவாச்சாரியார்களாகவிருந்து நித்திய, நைமித்திய பூசைகளைச் சிறப்பாக நடாத்தி வந்தனர். தொடர்ந்து அதேபரம்பரையில் வந்த சுவாமிநாத இராசேந்திரக் குருக்கள் அவர்களே அருள்மணம் கமழச் சிறப்பாகச் செய்து வந்துள்ளார். மேலும், தீராத நோய் தீர்த்தருளும் இம்முருகன் சந்நிதானத்தில் நோயென்று வருபவர்களுக்கு விபூதி போட்டு, நூல்கட்டி சுகப்படுத்தும் கைங்கரியத்தைக் குருக்கள் அவர்கள் பாரம்பரியமாகச் செய்து வந்தது போற்றுதற்குரியதாகும்.

கி.வா. ஜெகநாதன் அவர்கள் 1956ஆம் ஆண்டு முதல்
வருடாவருடம் யாழ்ப்பாணம் வரும்போது நீர்வேலி கந்தசுவாமி கோயில் குருக்கள் வீட்டில் தங்கியிருப்பதும், கோயிலில் பிரசங்கம் செய்வதும் வழக்கம். கி.வா. ஐயா அவர்களின் திருவிசைப்பா உரை 1980இல் நீர்வேலி கந்தசுவாமி கோயில்
மண்டபத்தில் வெளியிடப்பட்ட பெருமைக்குரியது. திருச்சி பேராசிரியர் இராதாகிருஷ்ணனும் இங்கு தங்கியிருந்து உரையாற்றியமையும் இவர்களின் பிரசங்கத்தைக் கேட்க யாழ்.மாவட்டத்தின் நாலாபக்கங்களிலிருந்தும் மக்கள் கூட்டம் வந்துபோவதும் கிராமத்துக்கே புகழ்தரும் விடயமாக அமைந்தது. இவ்வாலய

வருடாந்த மகோற்சவத்தில் 8ஆந் திருவிழாவும், 9ஆந் திருவிழாவும் போட்டித் திருவிழாக்களாக நடைபெற்றுவந்தன. சிறப்பாக இந்தியாவிலிருந்து சதுர்க்கச்
சேரி (சின்னமேளம்) நாட்டியப் பெண்கள் அழைக்கப்பட்டு நாட்டியக் கச்சேரிகள் நடாத்தப்பட்டதும், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் கூட்டம் வந்து பார்வையிடுவதும், சனம்விலத்தும் பெரியார்கள் சால்வையை அடித்து அமைதி!
அமைதி!! என்று மக்களை அடக்குவதும் மறக்கமுடியாத சம்பவங்களாகும். இதற்கு முன்னோடியாக அமைந்தவரும் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட குழுக்ககாகணபதி என்றமேளவாத்திய கலைஞர் இன்றும் மறக்கமுடியாத நினைவு
கூரப்படவேண்டியவரே.
நீர்வேலிக் கந்தசுவாமி கோயில் குருக்கள் சிவஸ்ரீ இராசேந்திரக்குருக்கள் அவர்களிடம் மட்டுமே முருகன்கோயில் பரிபாலனம் சம்பந்தமான ‚குமார தந்திர ஏடுகள்‛
இருந்தன. இதேபோல மேலும், முருகனுக்குரிய ஆகமவிதிகள் சம்பந்தமான ஏட்டுப்பிரதிகளைக் கட்டிக்காத்த பெருமை மேற்படி குருக்களுக்கே உரியதாகும்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் தமிழறிஞர்கள், சமயப் பெரியார்கள் குறிப்பாக கி.வா. ஜெகநாதன், குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் இங்குவந்து தரிசனம் செய்வது கிராமத்துக்குப் புகழ்தரும் விடயமாகும்.

மேலும், இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னர் இவ்வாலய வருடாந்த உற்சவத்தின்போது வாணவேடிக்கைகள் நடைபெற்றதும், அதனால் ஏற்பட்ட சம்பவங்களும் மறக்க முடியாத அம்சங்களாகும். 31.1.1999இல் மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இப்படியாகப் பலவகையிலும் சிறப்புடைய இவ்வாலயத்தின் பூஜா கருமங்களை ஆற்றிவரும் சுவாமிநாத இராசேந்திரக்குருக்களிடம் நூல் கட்டவும், விபூதி போடவும் குடாநாட்டின் பலபாகங்களிலிருந்து மக்கள் வருவது குறிப் பிடத்தக்கதாகும்.
குருக்கள் அவர்கள் 20.12.2000இல் சிவபதப்பேறடைந்து விட்டார்கள். அவரைத்தொடர்ந்து அவரது மகனான சுவாமிநாதக்குருக்கள் அவர்களே பூசாகருமங்களையாற்றி வருகின்றார். இக்கோவிலுக்கு 2010ம் ஆண்டில் பஞ்சதள இராஜகோபுரமும் மேலும் ஒரு மணிக்கோபுரமும் அமைக்கப்பட்டு
கும்பாபிஷேகங்கள் செய்யப்பட்டது சிறப்பிற்குரியதாகும். முருகப்பெருமானின் பேரருளை வேண்டுவோமாக.