கதிர்காம கோவில்

 

இலங்கையில் பாடல்பெற்ற திருத்தலங்களில் முருகப் பெருமான் எழுந்தருளியிருக்கும் கதிர்காமம் ஒன்றாகும். இத்தலம் சைவர்களால் மாத்திரமன்றிப் பிறமதத்தவர்களாலும்
வழிபாடு செய்யப்பெறும் பெருமை உடையது. கதிர்காமக்கந்தனின் பெருமைகளும் அற்புதச் சிறப்புக்களும் அளப்பரியன.

கடந்த சில வருடங்களாகவே கதிர்காம யாத்திரிகர்கள் போக்குவரவுக்கு நவீன வசதிகளைப் பெற்றுள்ளார்கள். அதன் முன் பல நூற்றாண்டுகளாக அடியார்கள் பாதயாத்திரை மூலம் சென்று கதிர்காமக் கந்தனைத் தரிசித்து வந்தார்கள். நூற்றுக்
கணக்கான மையில்களை வாரக் கணக்காக பாத யாத்திரை மூலம் கடந்து சென்று கதிர்காமக் கந்தனையே தம் மனத்திலிருத்திப் பக்தி வைராக்கியம் மிக்கவர்களாய் அடியார்கள் வழிபாடு செய்து திரும்புவார்கள். அப்படித் திரும்பும் பொழுது
அங்கு செல்ல முடியாத பக்தர்களுக்கும், அன்பர்களிற்கும் யாத்திரிகர்கள் முருகப் பெருமானது அருட் பிரசாதங்களைக் கொண்டு வந்து கொடுப்பது வழக்கம்.
நீர்வையூரின் மத்தியில் வாழ்ந்திருந்து துறவறம் மேற்கொண்ட இரு தபஸ் வினிகள் அடிக்கடி யாத்திரையில் ஈடுபட்டார்கள். அவர்களுள் ஒருவர் செல்லாச்சி அம்மையார்.
மற்றவர் சின்னாச்சி அம்மையார் அவ்விருவரும் கதிர்காமத்திலிருந்து தாம் கொண்டுவந்த வேல் ஒன்றினைத் தாம் வாழ்ந்திருந்த குடிசையின் பக்கத்திலுள்ள கொட்டிலில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்கள்.கதிர்காம உற்சவ காலங்களில் அங்கு செல்ல முடியாதவர்கள் அங்கிருந்து கொண்டுவந்த இந்த வேலைத் தரிசித்து மனநிறைவும் அருளாசியும் பெற்றார்கள்.

சிறிது சிறிதாக இத்தலம் அன்பர்களையும் ஆதரவாளர்களையும் தன்பாற்
கவர்ந்தது. கால கதியில் செல்லக் கதிர்காமம் எனப் போற்றப்பட்டு சிறப்பாக நேசிக்கப்பட்டு வந்தது. தவஸ் வினிகள் இருவரும் இத்தலத்தினை சிறப்புற அமைக்க விரும்பினர். ஊர்தோறும் பாத யாத்திரை மூலம் சென்று நிதி பெற்றனர்.
இங்கு கிடைத்த காணிக்கையையும் தமது பொருளையும் சேர்த்து 1936ஆம் ஆண்டு ஆகம விதிப்படியான ஓர் ஆலயத்தை புதிதாகவும் சிறப்பாகவும் அமைத்தனர். சிற்ப சாஸ்திர விதிகளிற்கமைய அமைக்கப்பெற்ற இவ்வாலயத்தில் அமைந்த
சிற்ப வேலைப்பாடுகள் அன்றைய சிற்ப வேலைத் திறமைகளை விளக்குவனவாக அமைந்துள்ளன. அவை இன்றும் புதுப்பொலிவுடன்காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.வெள்ளைக்கல்லாலான இக்கட்டத்தில் அமைந்துள்ள திருவாசியுடன்
கூடிய பிள்ளையார் சிலை பார்ப்போர் யாவரையும் பரவசப்படுத்துகின்றது.

1936ஆம் ஆண்டு ஆவணி மாத ரேவதி நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. நீர்வேலியிற் சிறந்த அந்தணர் குலப்பெருமகனாக வாழ்ந்திருந்த சிவஸ்ரீ க.தியாகராஜக் குருக்கள் (வியாபாரி ஐயர்) அக்காலத்திலிருந்து செல்லக் கதிர்காமசுவாமி கோயிற் பூசகராகத் தொண்டு செய்ய அருள்கிட்டியது. சிறிது காலத்தில்செல்லாச்சி அம்மையார் சமாதி நிலையடைந்துவிட்டார்.

குருக்கள் அவர்களது பக்தியும் கதிர்காம பக்தர்களின் ஆர்வமும் ஆலயம் மிகச் சிறப்பாக விளங்கவுதவியது. குருக்களவர்கள் முதுமையாற் தளர்வடைந்த பின்னர்
அவரது பிள்ளைகளான நடனசபாபதிசர்மாவும் பாலசுப்பிரமணிய சர்வமாவும், பின்பு நீர்வேலி நீலகண்டக் குருக்களும், பூசகராய் இருந்து தொண்டு செய்து வந்தார்கள். நீலகண்டக்குருக்கள் மாதாந்த உபயகாரர்களைச் சேகரித்து கோயிலை
நடாத்தியமை மறக்க முடியாததாகும்.

கோயிற் பராமரிப் பாளர்களாகச் செல்லாச்சியம்மையாரால் நியமிக்கப்பட்ட திருமதி இராசாவும் பிள்ளைகளும் தனித்து பராமரிக்க முடியாது போகவே அன்பர்கள் பலர் சேர்ந்து மாதாமாதம் பூசைக்கான ஒழுங்குகள் செய்து வந்தனர். அவரைத் தொடர்ந்து பிச்சாடனக்குருக்களின் பிள்ளைகளான கோவிந்தராஜன் (வேணு ஐயா) பூஜாகருமங்களை ஆற்றியதாக அறியக்கிடக்கின்றது. அவர்களைத் தொடர்ந்து பிரம்மஸ்ரீ கு. தியாகராசகுருக்கள் அவர்கள் பூசகராக தொண்டு செய்யத் திருவருள்
பாலித்தது. சர்மா அவர்கள் கோயிற் பூசைகளை மேலும் சிறப்புற நடாத்த ஆரம்பித்தர்கள். குறிப்பாக திரு.க.சின்னத்தம்பி, திரு.த.சின்னத்துரை, திரு.த.தர்மலிங்கம், திரு.கந்தசாமி, திருமதி இராசா, திருமதி சத்தியதேவி துரைசிங்கம் அவர்களும் மற்றும் பல அன்பர்களும் இக்கோயிலை புதுப்
பொலிவுடன் காண விரும்பினர்.
நாட்டின் குழப்பநிலை காரணமாகக் கதிர்காம யாத்திரை செல்ல முடியாத காரணத்தால் இக்கோயிலை விரைவில் புதுப்பிக்க வேண்டுமென்ற ஆர்வமும் மக்களிடம் உண்டாயிற்று. கோயிலை புனரமைத்துக் கும்பாபிஷேகம், திருவிழாக்
கள் நடத்துவதுடன் கதிர்காம உற்சவ காலங்களிலும் சிறப்பு விழாக்கள் நடாத்தி வழிபட வேண்டுமென்ற எண்ணமும் பக்தர்கள் மனத்தில் உதித்தது. இதனால் முன்னர் சிறிய அளவிலிருந்த ஆலயம் திருவருளின் வழிகாட்டுதலோடு மேற்குறிப்பிட்ட அன்பர்களின் தீவிர முயற்சிகளினால் சிறப்பாக புனரமைக்கப்பெற்று, வீதியில் புதிதாக விநாயகர் ஆலயமும் அமைத்து கும்பாபிஷேகமும் நடைபெற்றது. நவக்கிரக
கோயில் என்பன புதிதாக அமைக்கப்பட்டன. மேலும், புதிதாக அமைக்கப்பெற்ற விநாயகர் ஆலயத்திற்கும் பிரதிஷ்டை செய்வதற்கென இந்தியாவிலிருந்து வலஞ்சுழி விநாயகர் விக்கிரகம் தருவிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது ஓர் சிறப்பு அம்சமாகும்.

1985ஆம் ஆண்டு பங்குனி ரோகினியில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இவ்வாலயத்தில் ஆனிப் பூரணையை தீர்த்தத் திருவிழாவாக வைத்து கொடியேற்றமும் அதனைத் தொடர்ந்து 15 நாட்கள் திருவிழா நடைபெற்று தீர்த்தத் திருவிழாவும் திருக்கல்யாணமும் நடைபெற்று வருகின்றது. கந்தசஷ்டி உற்சவமும் நடைபெறுகின்றது. இன்னும் கதிர்காம உற்சவத்தின்போது விசேட அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவதோடு நவராத்திரி, திருவெம்பாவை ஆகியன சிறப்பாக நடைபெறுவதோடு காலத்துக்குக் காலம் சமய பிரசங்கங்களும் புராண படனங்களும் நடைபெற்று வருகின்றன. 2001ம் ஆண்டு கொடித்தம்பம் நிறுவப்பட்டு மகோற்
சவம் நடைபெற்று வருகின்றது. ஆனிமாத பூரணையில் தீர்த்தோற்சவமும் முதல்நாள் தேர்த்திருவிழாவும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கர்ப்பக் கிரகத்தில் வினையறுக்கும் வேலாயுதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வேலைக் கையிலேந்திய
முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வசேனா சமேதராக வீதி வலம் வந்து அடியார்களுக்கு அருள்பாலிக்கும் சிறப்பு கண் கொள்ளாக் காட்சியாகும். 08.06.1997இல் வைகாசி 25ஆம் நாள் புனர்பூச நட்சத்திரத்தில் புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம்
செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 2003ஆம் ஆண்டு குமாரபுஷ்பகரணி என்னும் பெயரில் தீர்த்தக்கேணியும் அமைக்கப்பட்டதோடு சுந்தரவல்லி, அமிர்தவல்லி தாயார்களுடன் உற்சவமாகிய சுந்தரராஜன் எந்தளும் காட்சி அற்புதமானது.
முருகன் அருள் அனைவர்க்கும் கிடைக்கட்டும். கோயிலுக்கென மேலும் காணி கொள்வனவு செய்யப்பட்டதோடு புனரமைப்பு வேலைகள் செய்யப்பட்டு 25.03.2012
கரவருஷம் பங்குனி மாதம் அச்சுவினி நட்சத்திரத்தில் இங்கு மகாவிஷ்ணுவுக்கும் ஆலயம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட சிறப்புடையது.

பரிபாலன சபை அமைக்கப்பட்டு அன்னதான மண்டபமும் அமைக்கப்பட்டு உற்சவகாலங்களில் அன்னதானமும்வழங்கப்பட்டு வருகின்றமை சிறப்பானதாகும்.