“ஆலயந் தானும் அரனெனத்தொழுமே” என்பது சிவஞானபோத சூத்திரமாக அமைந்துள்ளது. ஆலயங்கள் ஆண்டவனைச் சிந்திக்கவைக்கும் இடங்கள்
என்பதை இந்த அடிகள் வலியுறுத்துகின்றன. ஆலயம் என்பது ஆன்மாக்கள் இறையருளில் லயப்படும் இடம் என்பது பொருள். இதனால் சீவஆன்மாக்கள் பரவான்மாவில் லயப்பட்டு, அவனருள் பெறும் இடமாகக் கருதப்படுகின்றது. இதனால் ஆலயங்களைக் கோவில்கள் என்றும் கூறுவர். கோ + இல் = கோவில். இது இறைவன் மகிழ்வொடு இருக்கும் இடம் என்பர். இதனால் தமிழ் மூதாட்டியான ஒளவைப்பிராட்டியும்‚ கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்‛ என்று
கூறியுள்ளார். “திருக்கோவில் இல்லாத திருவிலூர்” எனத் திருமுறைகளும் எடுத்தியம்புகின்றன. இதிலிருந்து கோவில்களின் முக்கியத்துவம் விளங்குகின்றது.
திருக்கோவில்களை வழிபடுவதன்மூலம் மக்கள் அருட்செல்வம், பொருட்செல்வம் பெற்றுப் பெருவாழ்வு வாழ்கின்றனர். ஆலயங்கள் மூலமாக கலை, கலாசாரப் பண்பாடுகள் வளர்க்கப்படுகின்றன. சமயநெறிகள், ஆன்மீக சிந்தனைகள்
மக்களுக்கு உணர்த்தப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இதிலிருந்து ஆலயங்களின் பங்கு கிராமச் சிறப்பிற்கு எவ்வளவு முக்கியமானது என்பது புலனாகின்றது. ஆலயங்கள் கிராமத்துக்கு கண்போன்றது என்றால் மிகையாகாது. இந்தவகையில் கிராமத்தின் சிறப்பிற்கு ஆங்காங்கே ஆலயங்கள் அமைந்துள்ள சிறப்பு நீர்வேலிக் கிராமத்துக்கு
உண்டு. இக்கிராமத்தில் வடக்கு வாயில் ஆலயங்களாக நீர்வேலி மேற்கு மீனாட்சி அம்மன் கோயில், நீர்வேலி தெற்கு கோம்போடை அம்மன் கோயில், தெற்குவாயிலாக நீர்வேலி வடக்கு இராசராசேஸ்வரி அம்மன் கோயில், மேற்கு வாயிலாக நீர்வேலி தெற்கு நாச்சிமார் கோயில், நீர்வேலி மத்தி ஸ்ரீகாளி முத்துமாரி அம்மன் கோயில் ஏனையவை கிழக்கு வாயில்களாக நான்கு திக்குகளும் வாயில்கள் உள்ளதாக ஆலயங்கள் அமைந்துள்ளமை சிறப்பிற்குரியதாகும். முப்பெருங்கோயில்களாக வருடாந்த மகோற்சவங்க ளோடு மேலும் சிறப்புக்கள் பொருந்திய நீர்வேலி வாய்க்கால் தரவைப் பிள்ளையார் கோவில், அரசகேசரிப் பிள்ளையார்
கோவில், கந்தசுவாமி கோவில்கள் என்பனவும், மற்றும் வருடாந்த மகோற்சவம் நடைபெறும் கோவில்களாக இராசராசேஸ்வரி (பழைய அம்பாள் கோவில்), காளியம்மன் கோவில், செல்லக் கதிர்காமசுவாமி கோவில் என்பனவும் மற்றும்
வருடாந்த அலங்கார உற்சவம் நடைபெறும் ஆலயங்கள் ஒன்பதும், மற்றும் சிற்றாலயங்கள் என மொத்தமாக 32 இந்து ஆலயங்களும், கத்தோலிக்க ஆலயங்களாக பரலோகமாதா ஆலயம், அந்தோனியார் ஆலயங்களும் வேறு சிற்றாலயங்களும் கிராமத்தில் பரவலாக அமைந்து மக்கள் வழிபாடாற்றி
வருவது சிறப்பிற்குரியதே.
நாகபடம் பந்தல்
நீர்வேலியிலுள்ள முப்பெருங்கோயில்களிலும் மகோற்சவ காலங்களிலும், கும்பாபிஷேக காலங்களிலும் பிரதானவாயிலில் நாகபடம் பந்தல் அமைத்து அலங்கரிக்கப்பட்டு சுவாமி வெளிவீதி வரும்போது அந்தப் பந்தலிலேயே வெளிவீதி உலாவிற்கான கட்டியங்கூறுதலும், வீதிஉலா முடிந்ததும் பால் தீர்த்தம் கொடுத்து வரவேற்பதுமான நிகழ்வுகள் நீண்ட காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இப்போதும் இப்பாரம்பரியப் பண்புகள் பேணப்பட்டு வருவது சிறப்பிற்
குரியதே. இப்பந்தல் அமைப்புக்கு 30 அடி உயரமான பனைமரங்கள் நாட்டப்பட்டு பலமான 30′ நீளவளைகள் கட்டப்பட்டு கிடுகினால் வேயப்படும் சிறப்புண்டு.
இவ்வாலயங்கள் ஒவ்வொன்றினதும் வரலாறுகளையும் சிறப்புக்களையும் பற்றி ஆராய்வோமாக.