நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவில் தேர் திருவிழா

நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் ஆலயத்தில் பக்திபூர்வமாக இடம்பெற்ற தேர்த்திருவிழா

நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவிலின் தேர்த்திருவிழா இன்று 15.09.2016  பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
.
ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ சாம்பசதாசிவ சோமதேவக் குருக்கள் தலைமையில் அதிகாலை 2.30 மணிக்குக் கிரியைகள் ஆரம்பமாகின.
.
காலை 6 மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்றதைத் தொடர்ந்து 6.30 மணிக்கு வசந்தமண்டபத்தில் இருந்து பஞ்சமுக விநாயகப் பெருமானும் வள்ளி தெய்வசேனா சமேத முத்துக்குமாரசுவாமியும் தமது வீதியுலாவை ஆரம்பித்தனர். காலை 7.45 மணிக்கு கோபுர வாயிலில் கெந்தோற்சவம் இடம்பெற்றது.
.
காலை 8 மணிக்கு விநாயகப் பெருமானும் முருகப் பெருமானும் தத்தமது தேரில் ஆரோகணித்தனர். அதனைத் தொடர்ந்து மலையெனக் குவிக்கப்பட்ட ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தேங்காய்கள் பக்தர்களால் சிதறு தேங்காய்களாக உடைக்கப்பட்டன.
.
அதனைத் தொடர்ந்து ஆலயத்தை நிறுவிய அரசகேசரி மன்னனின் திருவுருவச் சிலைக்கு வழிபாடு இடம்பெற்றது. மன்னன் தேர்த்திருவிழாவிற்கு வருகை தந்திருப்பதாகக் கருதி அவரது சிலைக்குப் பரிவட்டம் கட்டி வரவேற்பு வழங்கப்பட்டது.
.
அரசகேசரி தேர் வடத்தை எடுத்துக் கொடுக்கும் பாவனையில் ஆலயப் பரிபாலன சபைத் தலைவர் சி.கிருபாகரன் அடியவர்களுக்குத் திருவடத்தைக் கையளித்தார். காலை 9.45 மணிக்கு ஆரம்பமாகிய தேர் பவனி காலை 11 மணிக்கு இருப்பிடத்திற்கு வந்தது. தொடர்ந்து பச்சை சார்த்தப்பட்டு பெருமான் தேரில் இருந்து அவரோகணித்தார்.
.
தேர்த்திருவிழாவையொட்டி பல அடியவர்கள் பறவைக்காவடி எடுத்தும் அங்கப்பிரதட்சணம் செய்தும் அடியழித்தும் கர்ப்பூரச் சட்டி ஏந்தியும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
கதலி வாழைக்குலைகளுக்குப் பலத்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும் விவசாயிகள் தாம் நேர்த்தியாக வைத்த வாழைக்குலைகளை தேர்த்திருவிழாவிற்கென வழங்கியிருந்தனர் இதனால் சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட வாழைக்குலைகள் ஆலய முன்பகுதியில் கட்டப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

தேர்த்திருவிழாவில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தனது மனைவியுடன் கலந்து கொண்டு வழிபாடாற்றியமையும்; இங்கு குறிப்பிடத்தக்கதாகும். (thnx : laleesan sir)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *