வலிகாமம் கிழக்குப் பகுதியில் பல பாகங்களிலுமிருந்து பாய்ந்து வருகின்ற மழை நீரைத் தன்னுள்ளடக்கி அதனைத் தனக்கு நீர் நிலையாலான வேலியாக்கி தன் கிழக் கெல்லையாக அமைத்துக் கொண்டதால் ‘நீர்வேலி’ என்னும் பெயரைக் கொண்டதே இந்த நீர்வேலிக் கிராமம். மேலும் நிலத்தின் கீழ் நன்னீரூற்று அமைந்துள்ள சிறப்பும் இயற்கை யாகவே இக்கிராமத்துக்கு உண்டு இதனையே ‘ஊர்ப் பெயர் உட்பொருள் விளக்கம்’ என்னும் நூலில் ஸ்ரீ.இ.நமசிவாயம்பிள்ளை அவரக்ள் பின்வரும் பாடல் மூலம் எடுத்தியம்பியுள்ளார்.
தாவப் பலாலி கொணீர் வேலியார் படி தாவடியான்
மாவைப் புரி முகமாலயன் றேடும் வயவையன் பிற்
போயிட்டியை யுறுவார்க்கு நல்லூரைப் புரிவன் மண்டை
தீவைத் தெரிக்கு முன்னே யொட்டகப்புலந் தீத்துய்யவே
தாவு அபல் ஆவி கொள – பாய்கின்ற பல பாகங்களிலுமிருந்து வருகின்ற மழைநீரைத் தன்னுள் அடக்குகின்ற நீர்வேலியூர் ஆர்படி சமுத்திர வேலியாற் சூழப்பட்ட பெரிய
பூமி எனப்படுகின்றது. வேலி என்பது பழந்தமிழ் சொல் வேரல், வேலி, வேர்க்
கோட்பலவு என்ற தொடக்கத்தையுடைய குறுந்தொகைப் பாடல் (8) கண்கவேலி ஸ்ரீஅரண் மதில் எல்லை எனச் சோழர் காலத்து நில அளவுப் பெயர்களில் ‚வேலி‛யும் ஒன்றாகும். யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலி ஈற்றுப் பெயர் கொண்டதாக
நீர்வேலி, அச்சுவேலி, கட்டைவேலி, திருநெல்வேலி, சங்குவேலி முதலான இடங்கள் உள்ளன.
இவற்றுள் நீர் நிலையைத் தனது கிழக்கெல்லையாகக் கொண்டதால் இக்கிராமம் நீர்வேலி ஆயிற்று. மேலும் இக்கிராமத்தின் எல்லைகளாக
- வடக்கே – சலவைத்தொழிலாளர் குளம், துரும்பதுறை,
மருதங்குளம், பறையன்கேணி. (இவை இப்போ
அழிந்த நிலையில் உள்ளன) - மேற்கே – பூதவராயர் கேணி, வேவியாக்குளம்
- தெற்கே – பூதர்மடம் கேணி, கிராஞ்சிக்குளம் ஆகிய நீர்நிலை
களும் எல்லைகளாக அமைந்துள்ளமை பெயருக்கு
வலிமை சேர்ப்பதாகவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் பரப்பளவு 8.6 சதுர கிலோமீற்றராகும்.
யாழ்ப்பாண நகரிலிருந்து பருத்தித்துறை செல்லும் பிரதான வீதியில் 10வது கிலோமீற்றரிலிருந்து 13வது கிலோமீற்றர் வரை அமைந்துள்ளதே இக்கிராமம். இக்கிராமத்தின் கிழக்குப் பக்கமாக கிராமத்தை ஊடறுத்துச் செல்வது யாழ்ப்
பாணம் பருத்தித்துறை வீதி யாகும். இக்கிராமத்தின் மேற்குப்பக்கமாக கிராமத்தை ஊடறுத்து யாழ்ப்பாணத்திலிருந்து அச்சுவேலிக்குச் செல்லும் வீதியே இராச பாதை வீதியாகும். இன்னும் கிராமத்தின் வடக்குப் பக்கமாக யாழ்.பருத்தித்துறை வீதியில் வாய்க்கால் தரவைப் பிள்ளையார் கோயிலடியிலிருந்து கிராமத்தை ஊடறுத்து அச்செழுவூடாக செல்லும் வீதி புன்னாலைக் கட்டுவன் வீதியாகும். மேலும், கிராமத்தின் தென்பகுதியில் கந்தசுவாமி கோயிலடியில் யாழ். பருத்தித்
துறை வீதியிலிருந்து ஆரம்பாகி கிராமத்தின் மத்திய பகுதியையும் தெற்குப் பகுதியையும் பிரிக்கும் வகையில் கரந்தனுக்கு ஊடாக ஊரெழுச் சந்தியை நோக்கிச் செல்லும் வீதியே நீர்வேலி கரந்தன் வீதியாகும்.
இந்த வீதிகள் கிராமத்தின் இயற்கை நிலப்பகுப்பிற்கு ஏற்றவகையிலேயே அமைந்துள்ளன என்றால் ஏற்புடைத்தாகும். ஏனெனில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியின் கிழக்குப் பக்கமாய் அமைந்த பகுதி வயலும் வயல் சார்ந்த நிலமுமான
மருதநிலப்பரப்பாலான பகுதியாகும். இம்மருத நிலப்பகுதியின் கிழக்குப்பக்கமே கிராமத்தின் கிழக்கெல்லையாக அமைந்துள்ள பாய்ந்துவரும் மழைநீரைத் தன்னகத்தே அடக்கி தனக்கு நீராலான எல்லையாக தொண்டமனாற்றையும் யாழ்ப்பாணக் கடலேரியையும் தொடுக்கும் நீர்நிலையமைந்துள்ளது இதுவே
வலிகாமத்தினதும் கிழக்கெல்லையுமாகும்.
வடக்கே அமைந்துள்ள நீர்வேலி புன்னாலைக்கட்டுவன் வீதிக்கு வடக்கே ¼ மைல் தூரத்தில் அமைந்துள்ளது கிராமத்தின் வடக்கெல்லைக் கிராமமான சிறுப்பிட்டிக் கிராமம். (பீடு -தரிசு நிலம்) இலங்கைப் பேச்சு வழக்கில் மேடு என்றும் பிட்டி
என்றும் கூறுவதற்கொப்பாக மேட்டு நிலமாகவும், தரிசு நிலமாகவும் அமைந்த சிறிய பகுதி என்பதனாலேயே சிறுப்பிட்டி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது.
இலங்கைப் பேச்சுவழக்கில் மேடு என்பதைப் பிட்டி, புட்டி என்பர். அதனை ஈறாகக் கொண்டு பல இடப்பெயர்கள் அமைந்துள்ளன. புலோலி தெற்கில் வெல்லப்பிட்டி, வல்லிபுரக்குறிச்சியில் வல்லாப்பிட்டி காரைநகர் மேற்கில் சூழவுள்ள பகுதிகள் தாழ்நிலைமாகவும் குறித்த ஒரு இடைப்பட்ட பகுதி மட்டும் பிட்டி நிலகமாவும் அமைந்ததால் அப்பகுதி இடைப்பிட்டி எனவும் அழைக்கப்படலாயிற்று. அதேபோல இறுப்பிட்டி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு இறங்கு துறையாகவுமுள்ளது.
மேற்கே யாழ். நல்லூர் அச்சுவேலி இராசபாதைக்கு கிழக்கால்அமைந்த பகுதி மணலும் களியும் சேர்ந்த இருவாட்டி நிலப்பகுதியாகவும், இராசபாதையின் மேற்குப் பகுதி செம்மண்ணும், செம்மண் களியும் சேர்ந்த செம்மண் நிலப்பகுதியாகவும் அமைந்துள்ளது. இந்த இராசவீதியிலிருந்து ½ மைல் தூரத்திலேயே அமைந்துள்ளது நீர்வேலியின் மேற்கெல்லைக் கிராமமாகிய அச்செழு, ஊரெழு, உரும்பிராய் ஆகிய கிராமங்களின் ஊரெல்லைகள்.
தெற்கே கிராமத்தின் மத்திய பகுதியையும் தென்பகுதியையும் பிரிக்கும் எல்லையாக அமைந்த கரந்தன் வீதியின் தென்புறமும் செம்மண்களி சேர்ந்த நிலப்பகுதியாக அமைந்துள்ளது. இந்த வீதியிலிருந்து தெற்கே ½ மைல் தூரத்தில் அமைந்துள்ளது கிராமத்தின் தெற்கெல்லைக் கிராமமாகிய கோப்பாய்க் கிராமம்.
இன்னும் நீர்வேலிக் கிராமப் பிரதேசத்தின் ஈசான பகுதி நீர்நிலையும், வயலும், தோட்டமும் மக்கள் குடியிருப்புக்களும் அமைந்துள்ளதால், பண்ணை + ஆலை = பண்ணாலை என அழைக்கப்பட வேண்டியது ‚பன்னாலை‛ யெனவும்,
தென்மேற்குப் பகுதி
ஆரம்ப காலத்தில் சிறு, பற்றைக்காடுகள் நிறைந்திருந்ததால் ‚’கரந்தன்’ எனவும் (காடு, கரம்பை என்ற பதத்திற்கமைவானது) அயலில் உள்ளது = இன்றும் உரும்பிராய் காட்டு வைரவர்கோவில் எனவே அழைக்கப்படுகின்றது.
உதாரணம்: வரணியில் – கரம்பைக் குறிஞ்சி
பளையில் – கரந்தாய்க்குளம்
என்பன போன்றதே.
மேற்குப் பகுதி: மாலையெனவும் வடமேற்குப் பகுதி கவடியெல்லை, மாசுவன் எனவும், தென்கிழக்குப் பகுதி கிராஞ்சி எனவும் வழங்க்பபடுகின்றது. மற்றும் கிராமத்தின் நடுப்பகுதியில் கட்டிமேடை, ஒல்லை, கேராலி வத்தை, யாரைப்புலம்,
கம்பன் புலம், முங்கொடை என்பனவும் கிராமத்திலுள்ள குறிச்சிப் பெயர்களாகும்.
கிராமத்தின் நில அமைப்பும் நீர்மட்டத்திலிருந்து மேற்கே செல்லச் செல்ல உயர்ந்துகொண்டு செல்வது காணக்கூடியதாகவுள்ளது. இதனால் நீரின் சுவையும் கிழக்கே எல்லையில் உவர் நீரும் மேற்கே செல்லச் செல்ல படிப்படியாகச்
சுவைத் தன்மை மாறி நன்னீரும் பெறக்கூடியதாகவுள்ளது. இக்கிராம எல்லைக்குள்ளேயே நீர் மட்டத்திலிருந்து நிலத்தின் உயரம் 20அடி வரை உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புகழ்பெறக் காரணிகள்:
ஒரு கொடி நறுமலர்களை மலர்வதற்கு நல்ல நீர்வேண்டும், பசளை வேண்டும் அதே போலக் கிராமத்தின் புகழ்பூப்பதற்கு நல்லவளம் வேண்டும். மக்களின் செயற்பாடுகள்
வேண்டும்.
அந்த வகையிலே நீர்வளமும், நிறைந்த நிலவளமும் கொண்டதே இக்கிராமம். கிராமத்தின் கிழக்குப் பகுதி இன்னும் கிழக்கே அமைந்த சமவெளியான தரிசுநிலம் பெருமரங்களற்ற வெளியாகவும், களிமண் பிரதேசமாகவும் பயிரேதும் செய்ய முடியாத உவர் நிலமாகவும் உள்ளது. இந்நிலப்பகுதியில் ஆரம்பகாலத்தில் விமான தளம் அமைக்கத் திட்டமிடப்பட்டதாகவும் சதுப்பு நிலப் பகுதியதனால் பொருத்த
மில்லையெனக் கைவிடப்பட்டதாகவும் அறியக்கிடக்கின்றது. அத்தோடு இங்கு நாகவழிபாடு நடைபெற்றதால் தாழைமரக்கூட்டங்களின் மத்திலியிருந்து நாகபாம்புகள் படையெடுத்ததால் இப்பகுதி விமானத்தளம் அமைப்பதற்கு பொருத்த
மில்லையென விடப்பட்டதாகவும் அறியக்கிடக்கின்றது. புல்தரவையாகக் காணப்படுகின்ற இப்பகுதியில் மந்தை இனங்கள்கூட்டங்கூட்டமாக மேயும் மேய்ச்சல் தரவை, மந்தையினங்கள்
நீர் அருந்த குளங்கள், குட்டைகள், அதையடுத்து மாட்டு வண்டிச் சவாரி நடக்கும் சவாரித் திடல் முற்றவெளி 1950ஆம் ஆண்டு இப்பகுதி காரியாதிகாரியாக இருந்த திரு.தி.முருகேசம்பிள்ளை என்பவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதை அடுத்த பகுதி பச்சைப் பசேலெனவும் திகழும் வயல் நிலங்களைக் கொண்டது. இன்னும் கிழக்குப் பகுதியில் தாழைகள் கூட்டம் கூட்டமாக நிற்கும் காட்சியும் ஒரு அழகுக்
காட்சியாகும்.இதனை அறிஞர் சிற்சபேசன் அவர்களின் நீர்வை நாட்டு வளம் என்னும் பாடலில் காணலாம்
புன்னை மாதுளை புங்கொதி மாபுளி
தென்னை கூவிளந் தேனுகர்வண்டினம்
துன்னு பூக வனந்தொறும் வாழையோ
டன்ன தாழை யடர்ந்ததுசோலையே
எனப்பாடியதிலிருந்து அறியலாம்.
“நீரகம் பொருந்திய ஊரகத்திரு” என்னும் ஒளவைப்பிராட்டியின் வாக்கிற்கமையப் பொருந்திய இக்கிராமத்தில் வாழும் மக்கள் உண்மையிலேயே புண்ணியம் செய்தவர்க
ளென்றால் மிகையாகாது. இக்கிராமம் பலவகைச் சிறப்புகளும் கொண்டதாகவே அமைந்திருக்கின்றது. மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது நீரேயாகும். இந்த நீர்வளம் இயற்கையாக அமைந்திருப்பதும், அதற்கேற்ப நிலவளச் சிறப்பு அமைந்
திருப்பதும் மிகவும் சிறப்பிற்குரியனவே. நன்னீரூற்று இக்கிராமத்தின் நிலத்தின் அடியில் அமைந்திருப்பது இயற்கைன சிறப்பேயாகும்.
மேலும் கிராமத்தின் கிழக்கெல்லையாக மேய்ச்சல் தரவைகளும் ஆங்காங்கே குளங்களும் அமைந்துள்ளமை சிறப்பு அம்சங்களாகும். மேலும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்ட மல்லாகத்தைச் சேர்ந்த அதிபர் பொன்னையா
என்பவர் மக்களின் வேண்டுகோளை நிறைவேற்ற ஒன்பது குளங்களை வெட்டியதாக அறியக்கிடக்கின்றது. மேற்கே செல்லச்செல்ல நல்ல செம்மண் பரப்புகள் கொண்ட பொன் விளையும் பூமி உண்டு. இந்தப் பூமிகளைப் பண்படுத்திக் காலத்துக்குக் காலம் வேண்டும் பயிர் செய்து ‚ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லை‛ என்று பறைசாற்றக் கூடிய ஏராளர்களின் நன்முயற்சி இக்கிரா மத்தின் புகழ்பூப்பதற்கு ஒரு
காரணமாகும். நீர்வேலி வாழைக்குலை இதற்கு ஓர் உதாரணமாகும். மேலும் விவசாயம் மட்டுமல்ல கைத்தொழிலும் நாட்டு வளர்ச்சிக்கு இன்றியமையாதனவேயென அறைகூவி நிற்கும் கைத்தொழிற் சாலைகளும், கைத்தொழிலாளர்களும் கிராமத்தின் புகழுக்கு இன்னொரு காரணமாக அமைந்துள்ளன. இன்றும் நீர்வேலிப் பூட்டு, நீர்வேலிக் கத்தி, நீர்வேலி வண்டில்
என்பன தரங்குன்றாது சந்தையில் முன்னணியில் நிற்கின்றன. இன்றும் நீர்வேலித்தெளி கருவியும் சந்தையில் முன்னிற்பதேயாகும்.
”கன்னங்கரிய கதலிவனக் கரையிற்
தெருவிற் சார்ந்து வளர்
தென்னம்பாளை மதுச் சொரியத் தேறலுண்டு
திகைத் தயருஞ்
சின்னஞ் சிறிய வணில் மீது
சீறிச் சினக்கும் காக்கையதன்
கன்னங் கிளியக் குட்டு மொரு
காட்சி யென்று முளதாமால்”
இவையனைத்துக்கும் மேலாக நீர்வேலிக் கிராமத்தில் அடியார்களின் அல்லல் அகற்றி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் மூன்று பெரும் சைவக் கோயில்கள் வடக்கு, மத்தி, தெற்கு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளதோடு மற்றும் பல ஆலயங்களும் ஆங்காங்கே அமைந்துள்ளன. இவைகளும் கிராமத்தின் புகழ்பூர்க்க முக்கிய காரணிகளே. ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதர் என்னும் சைவப் பெரியார் இக்கிராமத்தில் வாழ்ந்து சைவப்பணி, தமிழ்ப்பணியாற்றியதோடு திண்ணைப்பள்ளிக்கூடமமைத்து சமஸ்கிருத, தமிழ் இலக்கண வகுப்புக்கள் நடாத்தி வந்தமையும் நீர்வேலியின்
புகழுக்கு ஒரு காரணமாகும். கல்வியறிவு புகட்டும் கல்விச்சாலைகளில் ஊருணியாக அமைந்துள்ள அத்தியார் இந்துக் கல்லூரியும் மற்றும் நான்கு வித்தியாசாலைகளும், தனியார்கல்வி நிலையங்களும், அறநெறிப் பாடசாலைகளும் மேலும் பாலர் முன்பள்ளிகளும், பாலர் பகல் விடுதியும் அமைந்து கல்விப்பணியாற்றுகின்றன. இவைகளும் கிராமத்தின் புகழிற்கு இன்றியமையாதன. கலைவளர்க்கும் கலைநிலையங்களும், வாசிகசாலைகளும், இந்துமத வளர்ச்சிக்குத் தொண்டு செய்யும் சமய அபிவிருத்தி மன்றங்களும், மாதர் அபவிருத்தி மன்றங்களும், விளையாட்டுக் கழகங்களும் ஆங்காங்கே அமைந்து செயலாற்றுகின்றன. மேலும்| கத்தோலிக்க மதவளர்ச்சிக்கு கத்தோலிக்க தேவாலயமும் பாடசாலைகளும் அமைந்து நிற்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். நீர்வேலிக் கிராமத்தின் எல்லைகள் நாலாபக்கங்களும்
ஆலயங்கள் அமைந்து காவல் தெய்வங்களாக விளங்கும் சிறப்பு மேலும் கிராமத்தின் சிறப்பிற்கும் புகழுக்கும் ஒரு படிக்கல்லாகும்.
ஏரும் இரண்டுள. தாய் இல்லத்தே வித்துளதாய்,
நீரருகே சேர்ந்த நிலமுமாய், – ஊருக்கும்
சென்று வரவணித்தாய் செய்வாரும் சொற்கேட்டல்
என்றும் உழவே இனிது
- ஈசானத்திலே: சப்தகன்னிகள் கோயிலும் அதைச்சூழ அண்ணமார் கோவில், வைரவர் கோயில் என்பனவும்
- கிழக்குத்திசையில்: முழக்கம்பிட்டி நாச்சிமார் கோயிலும்
- தென்கிழக்கில் : நீர்வேலியையும் கோப்பாயையும் பிரிக்கும் எல்லையில் நீர்வேலி தெற்கு நாச்சிமார் கோயிலும் இலுப்பையடி பிள்ளையார் கோயிலும்
- தென்மேற்கே : கோப்பாய், நீர்வேலி, உரும்பிராய் ஆகிய கிராமங்களைப் பிரிக்கும் எல்லையில் சிவபூதவராயர் கோயிலும்
- மேற்கே : மாலைவைரவர் கோயிலும்
- வடமேற்கே: வைரவர் கோயில்
- வடக்கே : மாசுவன் வைரவர் கோயில், மனோன்மணி அம்மன் கோயில், நாச்சிமார் கோயில் என்பனவும்
- வடஎல்லைக்கண்மையாக: மீனாட்சியம்மன் கோயில், காமாட்சி அம்மன் கோயில் என்பனவும் அமைந்து சிறப்பிக்கின்றன.
யாழ்ப்பாணம் பறங்கியராட்சிக்குட்பட்ட காலத்தில் சங்கிலியன் இறந்தபின் பரநிருபசிங்கமும் பின்னர் அவர் மகன் பரராசசிங்கமுதலியும் இறந்த பின் பறங்கிக்காரர் சைவ ஆலயங்களை இடிப்பித்தனர் என்றும் அக்காலத்தில் இருந்த
சிவப்பிராமணர்களாகிய கெங்காதரஐயர் வம்சத்தினர் ஆலய விக்கிரகங்களையும் தட்டு முட்டுகளையும் கிணறுகளிற் போட்டு விட்டு நீர்வேலியிலும், வடமராட்சியிலும் குடியேறியிருந்தனர் என்றும் யாழ்ப்பாண வைபவமாலையில் முதலியார்குல சபா
நாதன் குறிப்பிட்டுள்ளார். எனவே, இக்கிராமம் தொன்றுதொட்டு இந்துசமய பாரம்பரியங்களுக்கும் வளர்ச்சிக்கும் நிலைக்களனாக அமைந்துள்ளதென்பது புலனாகின்றது. இதுவும் கிராமத்தின் புகழிற்கு ஓர் அம்சமாகும்.
மேலும் இக்கிராமத்தவர்கள் தொன்றுதொட்டு வள்ளுவர் கூறிய வழியில் நின்று விருந்தோம்பலில் சிறந்து விளங்கியுள்ளார்களென்பதும் அப்பண்பு இக்கிராம மக்களுக்குப் பாரம்பரியமானதென்பதும் யாவராலும் போற்றப்படும் உயர்ந்தபண்
பாகும். இவ்வுயர்ந்த பண்பும் கிராமத்தின் புகழில் இடம்பெறும் ஓர் அம்சமாகும்.
மேலும் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதை நிலைநாட்ட நோய்களைக் குணமாக்க சித்த வைத்திய முறையில் வைத்தியசாலைகளும், மேலை நாட்டு
வைத்தியசாலைகளும் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களும் அமைந்து சேவையாற்றி வருகின்றமையும் ஓரம்சமாகும். இன்னும், கிராமத்தின் மேற்கு ஊர்களிலிருந்து பாய்ந்துவரும் மழைநீர் கிழக்குநோக்கிப் பாயும் ஆறுபோன்ற பெரும் வெள்ளவாய்க்கால்கள் நான்கு அமைந்துள்ளமை இக்கிராமத்துக்குப் பெரிதும் பெருமை தருவதாக அமைந்துள்ளமையும் கிராமத்தின் புகழுக்கு ஒரு அம்சமாகும்.
மேலும், கிராமத்தின் ஊராட்சியின் வளர்ச்சியும் அமைவும் இக்கிராமத்தின் புகழில் இடம்பெறும் அம்சங்களாகும்.
நீர்வேலி தெற்கில் பூதர்மடம், கூத்தாடுவான் குளம்
கிராமத்தின் எல்லைகளிலே கிழக்கே நீர்நிலைக்கு அண்மித்ததாக ‘சீயாக்காடு, பன்னாலை, தந்திராய் ஆகிய மூன்று சுடுகாடுகளும், இடுகாடும் வடக்கே ஊரெல்லையில் ‚காளயன்புலம்‛ என்னும் சுடுகாடும் அமைந்துள்ளமையும் கிராம
அமைப்பின் சிறப்பிற் குறிப்பிடப்பட வேண்டியனவாகும்.
எனவே, பலவகைச் சிறப்புகளும் கொண்டதே இந்தப்‚புகழ்பூத்த நீர்வேலி‛ என்பது வெளிப்படையாகின்றது.
கிராமத்தின் குறிச்சிகளாக
பன்னாலை, கட்டிமேடை, கேராலிவத்தை, யாரைப்புலம், கம்பன் புலம், ஒல்லை, முங்கொடை, மாலை, மாசுவன், கரந்தன், கொலனி, ஐயாவத்தை, சுந்தராவத்தை, கோட்டைக்காடு, விளான், குருந்தடி, தோட்டவெளி, பத்தாவத்தை, நறுவத்தாள், புலிகொல்லை, கியானை, காளயன்புலம், கம்பன்புலம், புட்டியன்புலம், கீச்சியன்புலம், தந்திராய், சிவியாக்காடு, மாரியந்தனை என்பனவாகும்.