வாய்க்காற்றரவை பிள்ளையார் கோவில்

20160421_113609_Richtone(HDR)

இக்கிராமத்தின் ஈசான திசையிலே நீர்வேலிச்சந்திக்குத் தெற்குப்புறமாக அமைந்துள்ளதே இவ்வாலயம். இவ்வாலயம் அமைந்துள்ள பகுதியால் மேற்குத் திசை
யில் உள்ள பகுதிகளிலிருந்து பாய்ந்துவரும் மழைநீர் கிழக்கே செல்லும் பெருவாய்க்கால் ஒன்று அமைந்துள்ளது. (தரை -தரவை) வாய்க்கால் ஊடறுத்துச் செல்லும் பகுதி என்பதால் இப்பகுதிக்கு வாய்க்கால் தரவை என்னும் பெயர் அமைவ
தாயிற்று. இதனால் இது வாய்க்கால் தரவைப்பிள்ளையார்கோவில் எனப்பெயர் பெறுவதாயிற்று.

இவ்வாலயம் அமைந்திருக்கும் காணிபண்டுதொட்டு‚ மூத்தநயினார் கோவில் வளவு‛ எனவே அழைக்கப்பட்டு வந்தது. இற்றைக்கு (500) ஐந்நூறு வருடங்களுக்கு மேலாக இந்தவளவு மரங்கள் நெருங்கியுள்ள சோலையாகவும், கால்
நடைகள் தண்ணீர் குடிக்கும் கேணியுடையதாகவும் இருந்தது. போத்துக்கீசர் இலங்கையை ஆண்ட காலத்திலே குப்பிளான்,குரும்பசிட்டி, கட்டுவன் முதலிய ஊர்களிலுள்ளவர்கள் இந்த நீர்வேலிக் கிராமத்தினூடாக கால்நடையாக வன்னிக்குச்
சென்று கமஞ்செய்து வருவது வழக்கம். இப்படியாகப் பிரயாணம் செய்பவர்கள் இந்தக்கோவில் அமைந்துள்ள மூத்த நயினார் கோவில் வளவுக்குள் தங்கி களைப்பாறிச் செல்வது வழக்கம். இப்படியாக நடந்துவரும் நாளில் வன்னியில்
கமஞ்செய்த தமது வயலுக்குள் கண்டெடுத்த பிள்ளையார் விக்கிரகம் ஒன்றை தமது சொந்த ஊரிலே பிரதிஷ்டை செய்ய விரும்பி தமது நெல்லுச்சாக்கிற்குள் வைத்துக்கொண்டு திரும்பிவரும் போது| வழமைபோல இந்த வளவிற்குள் அந்த
நெல்லுச் சாக்கை இறக்கிவைத்து களைப்பாறி தங்கள் ஆயாசத்தைத் தீர்த்தபின் குறித்த நெல்லுச் சாக்கைத் தமது ஊருக்குக் கொண்டு செல்வதற்காக தூக்கினார்கள். தூக்கமுடியவில்லை. ஏலக்கூடியவகையில் பிரயத்தனங்கள் எல்லாம் செய்தும் குறித்த சாக்கு மூடையை அசைக்கவே முடியவில்லை. எல்லாம்வல்ல இறைவல்லமைக்கு முன்னால் மனித சக்தி நிற்க முடியுமா? இது பிள்ளையாரின் திருவிளையாட்டே
என எண்ணி அந்த நெல்மூடையைக் குறித்த மூத்தநயினார் கோவில், வளவிலேயே விட்டுவிட்டு அச்சத்தோடும், ஆச்சரியத்தோடும் தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்றுவிட்டனர்.

இச்செய்தியைக் கேள்விப்பட்ட சிறுப்பிட்டியைச் சேர்ந்த
வரும், உயர்வேளாண் மரபில் பிறந்த வருமான காணிச்சொந்தக்காரன் அக்காலத்தில் நீர்வேலியில் வசித்த பிரம்மஸ்ரீ சிவகாமிக்குருக்களோடு தொடர்புகொண்டு, கலந்தாலோசித்து, குறித்த நெல்லுச்சாக்கிலிருந்த பிள்ளையார் விக்கிரகத்தை
எடுத்து அவ்விடத்திலேயே கோவிலைக்கட்டி பிரதிஷ்டைசெய்துகும்பாபிஷேகமும் செய்யப்பட்டது. இதிலிருந்து தாமாகவே தமக்கு இடம் எடுத்துக்கொண்ட பிள்ளையார் என மக்கள் மிகவும் பயபக்தியுடன் வழிபட்டு வரலாயினர்.

மேலும் பண்டு தொட்டு ‚மூத்தநயினார் கோவில் வளவு‛ என அழைக்கப்பட்டு வந்ததால் இக்காணியில் பூர்வீகமாகவே பிள்ளையார் ஆலயம் ஒன்று அமைந்திருக்கவேண்டுமெனவும் எண்ணவேண்டியுள்ளது.

கும்பாபிஷேகம் செய்த சிலவருடங்களின் பின் இக் காணியின் உரிமைக்காரர்கள் கோவிற் பரிபாலனத்தை குறித்த சிவசாமிக் குருக்களிடமே ஒப்படைத்தனர். அன்று தொடக்கம் குருக்களுடைய பரம்பரையினாலேயே இக்கோவில் பரிபால
னஞ்செய்யப்பட்டு வருகின்றது. சிவசாமிக்குருக்கள் வயது முதிர்ந்த காலத்தில் தனது
மருமகனான பிரம்மஸ்ரீ சந்திரசேகரக்குருக்களிடம் பரிபாலனத்தை ஒப்படைத்தார். சிவசாமிக்குருக்கள் கோவிற் பரிபாலனத்தை ஒப்படைக்கும்போது தாம் சிவலோகப் பிராப்தியடையும் திதியில் பிள்ளையாருக்கு வருடாந்தம் அபிஷேகம் செய்ய
வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். அப்படியே இன்றும் மார்கழி அபரபக்க நவமியில் அபிஷேகம் நடைபெறுகின்றது.
அண்ணாச்சாமிக்குருக்கள் வாக்குச்சித்திக்கும் பல சம்பவங்கள் உண்டு. இப்பகுதி மக்கள் இன்றும் குருக்களின் சிறப்புப்பற்றி பேசுவதை அறியலாம். வேதாகம சாஸ்திரங்களில்வல்லவரான சந்திரசேகரக் குருக்களை அண்ணாச்சாமிக்
குருக்களெனவும் அழைப்பதுண்டு. அவரது பரம்பரையில் வந்தபிச்சாடனக் குருக்களென அழைக்கப்பட்டு வந்த ஆபத்தோத்தாரணக் குருக்களின் பின் அவரது பிள்ளைகளான பிரம்மஸ்ரீசந்திரசேகரக் குருக்கள், சோமசுந்தரக்குருக்கள், சுப்பிரமணியசர்மா ஆகியோரே இக்கோயிலின் பரிபாலனத்தைச் செய்து
வருகின்றனர். அவர்கள் குடும்பமே பாரம்பரியமாக இவ்வாலயப்பூசைகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இக்குருக்கள் பரம்பரை இந்தியாவைச் சேர்ந்த இராசகுரு பரம்பரைஎன அறியக்கிடக்கின்றது.
இவ்வாலயத்தில் அமைந்துள்ள மூலமூர்த்தியோடு சிவன், அம்மன், முருகன், தெட்சணாமூர்த்தி, மகாலட்சுமி,நவக்கிரகம், வைரவர் ஆகிய தெய்வங்களுக்குத் தனித்தனிசன்னிதானங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாலய விமானம் துவிதளவிமானமாக அமைக்கப்பட்டு 26.05.2008 திங்கட்கிழமை நவகுண்டபச்ச கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் இவ்வாலயத்தில் பூர்வீகமான சிவலிங்கம் ஒன்றும் வழிபாட்டுக்குரியது குறிப்பிடத்தக்கது.

நீர்வேலிக் கிராமத்தின் ஈசான திசையிலேயே இவ்வாலயம் அமைந்துள்ளதால் ஆகமங்களின் கூற்றுப்படி இவ்வாலயத்தின் அருட்பிரவாகத் தால் இக்கிராம மக்கள் சிறப்புற்று வாழ்கின்றனர் என்பது ஏற்புடைத்தாகும்.

வேதாகம முறைப்படி நித்திய, நைமித்தியங்கள் நடைபெற்று வரும் இவ்வாலயத்தில் திருவெம்பாவை, ஆருத்திராதரிசனம், நவராத்திரி முதலியனவும் மாதாந்தம் சதுர்த்தித் திருவிழாவும், ஆடி மாதம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆடிப்பூர்வச் சதுர்த்தியில் தேர்த்திருவிழாவும், பௌர்ணமித்தினத்தன்று தீர்த்தத் திருவிழாவுமாக தொடர்ந்து பன்னிரண்டுநாட்கள் பகல் இரவு மகோற்சவம் நடைபெற்று வருகின்றது.அதனையடுத்து வெகுவிமரிசையாகப் பூங்காவனத் திருவிழா நடைபெற்று வருவது பிரபல்யமான நிகழ்ச்சியாகவும் முருகனுக்குத் திருக்கல்யாண உற்சவமும் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது. மேலும் இங்கு திருவாதவூரடிகள் புராணபடனம்,பெரியபுராண படனம் என்பனவும், சமயப் பிரசங்கங்களும் காலத்துக்குக் காலம் நடைபெற்று வருகின்றன.

மேலும், இக்கோவிலுக்குரிய சித்திரத்தேர் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட கோவிந்தராஜ் ஆச்சாரி அவர்களாலும், அவர் குழுவினராலும், நீர்வேலி ஆச்சாரிமார்களினதும், சிற்பாசாரியர்களின் கைவண்ணத்திலும் உருவாக்கப்பட்ட
இப்புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழாவை நல்லூர்க்கந்தசுவாமி கோயில் பரிபாலகர் கௌரவம்மிக்க சண்முகநாதமாப்பாண முதலியார் வடந்தொட்டாரம்பித்தமை சிறப்பிற்குரியதாகும். 1962 ஆம் ஆண்டு ஆடி 1ஆந் திகதி தொடக்கம் இவ்வண்ணமிகு சித்திரத்தேரில் அலங்கார பூஜீதராக விநாயகப்
பெருமான் வீதிவலம் வந்து துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனஞ்செய்து அருள்பாலிக்கும் காட்சியே ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும்.

இற்றைக்கு இருநூறு வருடங்களுக்கு மேலாக இக் கிராமத்தில் வாழ்ந்து மறைந்த அரிஅரிவட்டர் என்னும் தலைசிறந்த மந்திரவாதி அக்காலத்தில் பரவியிருந்த பேதி
நோயைக் கட்டுப்படுத்தி மக்களைப் பாதுகாக்க இந்த வாய்க்கால் தரவைப் பிள்ளையார் பேரில் வசந்தன்பாடி பிள்ளையாரின் பேரருளால் கொடியநோயினின்றும் மக்களைக் காத்துள்ளாரென அறியக் கிடக்கின்றது. இந்த வசந்தன் இன்றும் அம்மை, பொக்கிளிப்பான் போன்ற நோய்கள் ஏற்படும் காலங்
களில் அடிக்கப்பட்டு மக்கள் பாதுகாக்கப்படுவது யாவரும் அறிந்ததே.

“நீர்வேலிச் சோலையில் வாய்க்கால் தரவை
நிறைந்திருக்கும்”
“காரேறும் யானைமுக விகடாசலக் கற்பகமே”
“வாய்க்கால் தரவையொரு கோட்டு மும்மத
வாரணனே”
“வாய்க்காற்பதிவளர் முத்தானைத்தைங்கர வாரணமே”
“நீர்வேலியூர் திருப்பதிவாழ் வாரேறுமுலை மங்கை
யுமை பங்கர்மகனென்றும், வாய்க்காற்பதிக்கடவை சந்நிதி
வழங்க”

என்னும் குறித்த வசந்தன் காப்புப் பாடல்களிலும் மற்றும் வசந்தன் பாடல்களிலும் இப்பிள்ளையாரின் அருள்வேண்டிப் பாடல்கள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வாலயத்தின் முன்பகுதி வயல்சார்ந்த
இடமாக விளங்குவதால் விவசாயிகள் தமது வயற்கருமங்களை ஆரம்பிக்கும்போது இந்த வினாயகர்மீது நேர்த்திவைத்தே ஆரம்பிப்பதும், அறுவடையின்போது பிள்ளையாருக்கு தமது காணிக்கைகளைச் செலுத்தி வருவதும் வழக்கத்திலுள்ள பழக்
கங்களாகும். இன்னும் இப்பகுதியிலுள்ள அனைவரும் தாம் எக்காரியங்களை ஆரம்பிப்பினும் வாய்க்கால் தரவைப் பிள்ளையாரை வணங்கியே ஆரம்பிப்பது வழமையாகவுள்ளது. தமது பிரயாணங்களின்போதும் பிள்ளையாரை வணங்கியே
பிரயாணத்தை ஆரம்பிப்பார்.

இற்றைக்கு ஐம்பது வருடங்களுக்குமுன் திருநெல்வேலிப் பகுதியில் அழகிய குதிரைவாகனம் ஒன்றைச் செய்வித்து வடமராட்சியிலுள்ள கோவிலுக்குக் கொண்டு செல்லும் வழியில் இவ்வாலயத்திற்கு அண்மையில் அந்த வாகனம் ஏற்றிவந்த வண்டியை நிறுத்திவிட்டு தமது தாகசாந்தியை நிறைவேற்றிக்கொண்டு மீண்டும் பயணத்தை ஆரம்பிக்க முற்பட்டவர்களால் பிரயாணத்தை ஆரம்பிக்க முடியவில்லை. அவர்கள்பல பிரயத்தனம் செய்தும் முடியாமற் போனதால் ஆச்சரியமும், பயமுமடைந்த வாகன உரிமைக்காரர்கள் விடயத்தைஇக்கோவில் குருக்களுடன் கலந்தாலோசித்தபோது ‚பிள்ளையார் இக்குதிரை வாகனத்தை தனதாக்க விரும்புகிறார்போலும்‛ என குருக்கள் கூறினார்.இதனை அவர்கள் ஏற்றுக்கொண்டு குறித்த வாகனத்தைஇந்தப்பிள்ளையாருக்கே கொடுப்பதாகத் தீர்மானித்து குறித்த
வண்டியை கோவிலுக்குக் கொண்டுவர எதுவித தடையுமின்றிவண்டி வந்ததாகவும் குறித்த வாகனத்தை இந்தப்பிள்ளையாருக்கே கொடுத்தாகவும் அறியக்கிடக்கின்றது.
இதேபோலப் பிள்ளையாரின் அருட்செயல்கள் பல.

மேலும் இவ்வாலயத்துக்குப் பெருமை தரும் வகையில் இவ்வாலய வருடாந்த உற்சவத்தின்போது தமிழக அறிஞர் திருமுககிருபானந்தவாரியார் அவர்களின் தொடர்பிரசங்கங்களும் பொன்னுத்தாயின் மேளக்கச்சேரியும், தேர்த்திருப்பணி நிதிக்
காக 1962 முதலாவது சித்திரத்தேரோட்டத்திற்கு ‚நாதசுரகான அரசி‛ மதுரை ஆ.ளு. தமிழ்ச்செல்வி கே.பி. சுந்தராம்பாளின்சங்கீத நிகழ்ச்சியும் நடைபெற்றது ஆலய வரலாற்றில் இடம்பெறும் அம்சங்களாகும்.

மேலும், வருடாவருடம் இப்பிள்ளையார் மகடாசூர சங்காரத்திற்காக அச்செழு கொக்கிருந்தபதி கண்ணகை அம்மன் கோவிலுக்குப்போய் வரும் சிறப்பு நிகழ்ச்சி கிராமத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியாகும். மேலும், வருடாவருடம் பங்குனி உத்தரத்தை இறுதியாக வைத்து 10 தினங்களும், கார்த்திகையில் பிள்ளையார் பெருங்கதை படித்து அக்காலத்திலும் இலட்ச அர்ச்சனை வருடத்தில் இரண்டு
தடவைகள் நடைபெறுவதோடு, அன்னதானங்களும் நடைபெற்றுவர திருவருள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். வருடாவருடம் கயமுகாசூரன் போரும் நடைபெற்றுவரும் சிறப்பு உண்டு. நாமும் பிள்ளையாரின் பேரருளை
வேண்டுவோமாக.