தற்போது நீர்வேலி வடக்கில் ‚வெளியிலடைப்பு‛ என்னும் காணியில் கோயில் கொண்டெழுந்தருளி அடியார்களின் அல்லல் போக்கி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் இவ்வாலயம் மிகவும் பழமைமிக்கது.
இப்பகுதியில் வாழ்ந்த விஸ்கர்மகுலமக்களில் ஆறுமுகம் சின்னப்பு, கார்த்திகேசு என்பவர்களை முதன்மையாகக் கொண்ட இம்மக்கள் தமது வணக்கத்துக்காக தமது
குலதெய்வமான காளியம்மனை வைத்து வழிபட்டு வந்தனர். 1936 ஐப்பசி 26ஆந் திகதி யாழ்ப் பாணம் மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பின்படி 1958ஆம் ஆண்டு ஐப் பசி 15ஆந் திகதி3615ஆம் இலக்க உறுதிப்படி புறக்டர் சி. கனகரத்தினம்
முகதாவில் கதிர்காமர் கைம்பெண் தெய்வானைப்பிள்ளை, ஆறுமுகம் சின்னப்பு, சின்னத்தம்பி வல்லிபுரம் ஆகியவர்களால் தர்மசாதனம் செய்யப்பட்ட இக்காணியில் ஆலயம் அமைத்து 1962ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பூசை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆரம்பத்தில் குருக்கள் திலகம் பிரம்மஸ்ரீ க. தியாகராசாக்குருக்களும் தொடர்ந்து பஞ்சாட்சரக் குருக்கள், சோமதேவக்
குருக்கள், நீலகண்ட சர்மா, சத்தியேந்திர சர்மா ஆகியோரும் இப்போ குமாரசதாசிவ சர்மா அவர்களும் நித்திய நைமித்திய பூசாகருமங்களை ஆற்ற நியமிக்கப்பட்டு பூசாகருமங்களை ஆற்றி வருகின்றனர். இவ்வாலயம் மாதப்பூசைகாரர் மற்றும் உபயகாரர்களை அடக்கிய பரிபாலன சபையால் நிர்வகிக்கப்படுகின்றது.
இராஜகோபுரம் அமைக்கப்பட்டதோடு மேலும் திருப்பணிகள் செய்யப்பட்டதோடு கொடித்தம்பமும் நாட்டி 01.06.2006இல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஆலயத்துக்கென ஊஞ்சல் பதிகம் பாடப்பெற்றுள்ளது.
பங்குனி உத்திரத்தை (பூரணையை) கடைசியாக வைத்து 12 தினங்கள் மகோற்சவம் நடைபெறுவதோடு தேர்த்திருவிழா, தீர்த்தத் திருவிழா, பூங்காவனத் திருவிழா
என்பன சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அன்னதான மண்டபம் அமைக்கப்பட்டு உற்சவ காலங்களிலும், மற்றும் விசேட காலங்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது. புதிய தேர் அமைக்கப்பட்டு தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருவது சிறப்பிற்குரியது. உற்சவ காலங்களிலும், சித்திரா பௌர்ணமியன்றும் அன்னதானம் நடைபெற்று வருகின்றது. கேதாரகௌரி பூசை, திருவெம்பாவை, நவராத்திரி,சோமவாரம், ஐப்பசி வெள்ளி, திருவிழாக்களும் மற்றும் விசேட
உபயங்களும் ஆடிப்பூரத் திருவிழாவும் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது. மேலும் பிள்ளையார், முருகன், ஸ்ரீசக்கரம்,சந்தானகோபாலர், சோமாஸ்கந்தர், நடேசர், வைரவர் என்பன தனித்தனி சந்நிதானங்கள் அமைத்து வழிபாடாற்றி வருவது
ஆலய வளர்ச்சியை எடுத்துக் காட்டுகின்றது. மேலும் காலத்துக்குக் காலம் சமய பிரசங்கங்களும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அம்பிகை அருள் அனைவர்க்கும் கிடைக்கட்டும்.