நீர்வேலி தெற்கு முருகையன் கோயில்

நீர்வேலிக் கந்தசுவாமி கோயிலுக்குத் தென்மேற்குத்திசையாக அமைந்துள்ளதே இக்கோயிலாகும்.

ஆரம்ப காலத்தில் முருக பக்தர்கள் கந்தபுராண காலம் எனக் கூறப்படும் காலத்தில் கந்த புராண படனம் செய்து வந்த மடாலயமாக விளங்கியதால் கந்தபுராணக் கொட்டில் என அழைக்கப்பட்டு வந்தது. அன்று மடாலயமாக அமைந்திருந்த
இவ்வாலயம் இன்று வளர்ச்சியடைந்து அழகு மிளிரும் அழகன் (முருகன்) அடியார்களின் அல்லல் அகற்றி அருள்பாலிக்கும் ஆலயமாக விளங்குகின்றது. நொத்தாரிஸ் த. சச்சிதானந்தன் அவர்களாலும் அவரைச் சார்ந்தவர்களாலும் பரிபாலிக்கப்பட்டுவந்த இவ்வாலயம் இன்று அயலவர்களினது ஒத்துழைப்பாலும்,
முருகனது திருவருளாலும் அழகிய கற்பக்கிரகம், அர்த்த மண்டபம், சபா மண்டபம், தெரிசன மண்டபம், மணிக்கோபுரம், மடைப்பள்ளி ஆகிய அமைப்புக்களுடன் கூடிய
ஆலயமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாலயம் திருப்பணிச்சபை ஒன்று உருவாக்கப்பட்டு திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு 12.09.2010இல் புனராவர்த்தன கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தற்போது கந்தபுராண படனம் நடைபெற்று அன்னதானம் வழங்கப்படுவதோடு, மணவாளக்கோல திருவிழாவும் நடைபெறுகிறது.திருவெம்பா, நவராத்திரி என்பன நடைபெறுகின்றன.