நீர்வேலி மேற்கில் வாழ்ந்து காலஞ்சென்ற இராக்கப்பு என்பரின் தாயாரால் ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயம் மாசுவன் சந்தியிருந்து சுமார் ¼ மைல் தூரத்தில் நீர்வேலி புன்னாலைக்கட்டுவன் வீதியில் மேற்கே அமைந்துள்ளது.
வடக்கு வாயிலாக அமைந்த இவ்வாலயம் ‘கூத்துவாரி’ என்னும் காணியில் அமைந்துள்ளது. இவ்வாலயம் ஆரம்பத்தில் ‘ஊரிப்பிட்டிகாளி கோவில்’ எனவும் ‘கூத்துவாரி அம்மன் கோயில்’ எனவும் வழங்கப்பட்டு வந்ததாக அறியக்கிடக்கிறது.
1985ஆம் ஆண்டளவில் இவ்வாலய சூழலில் உள்ள அடியார்கள் சேர்ந்து இவ்வாலயத்தைப் பொது ஆலயமாக்கி பரிபாலன சபையையும் அமைத்து ஆலய சூழலில் ஆலய வளர்ச்சிக்காக மேலும் காணிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டு
வீதிகள் விசாலிக்கப்பட்டு சிறிதாகவிருந்த இவ்வாலயம் கற்பக்கிரகம், அர்த்தமண்டபம், சபாமண்டபம், தெரிசனமண்டபம், மணிக்கூடு கோபுரம், மடைப்பள்ளி, களஞ்சியம் போன்ற அமைப்புகளுடன் புனருத்தாரணம் செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இங்கு தினசரி பூசைகளும், விசேட காலங்களில் விசேட உற்சவங்களும் ஆடிப்பூரத்தை இறுதியாகக் கொண்டு 12 நாள் அலங்கார உற்சவமும் நடைபெற்று வருகின்றது.
உற்வசகாலங்களிலும், சித்திராபௌர்ணமி போன்ற விசேட தினங்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டு வருவது சிறப்பிற்குரியதே. திருவூஞ்சல் பதிகம் பாடப்பெற்ற சிறப்பிற்குரியதாகும். திருவெம்பாவை நவராத்திரி காலங்களில் விசேட பூசை வழிபாடுகளும் நடைபெறுவதோடு மானப்பூ தினத்தன்று
நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் மகிடாசூர சம்மாரத்திற்கு இங்கு எழுந்தளிருவரும் சிறப்பும் குறிப்பிடத்தக்கதாகும். அம்பிகையின் அருள் அனைவர்க்கும் கிடைப்பதாகுக.