அரசகேசரி பிள்ளையார் கோவில்

நீர்வேலிக் கிராமத்தின் நடுநாயகமாக விளங்கி அருள் பாலித்துக் கொண்டிருப்பதே அரசகேசரிப் பிள்ளையார் ஆலயமாகும். செம்மண் பிரதேசத்தில் அமைந்ததால் இவ்வாலயத்தைச் செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் என்றும் வழங்குவ
துண்டு.

யாழ்ப்பாண இராச்சியத்தை அரசாட்சிசெய்து வந்த தமிழ் அரசர்கள் நல்லூரில் இராசதானியமைத்ததோடு நல்லூரிலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பாகங்களுக்கும் போக்குவரவு செய்வதற்கான வீதிகளையும் அமைத்தனர்.
இந்தவகையில் நல்லூரிலிருந்து இருபாலை, கோப்பாய், நீர்வேலி, சிறுப்பிட்டி, நவுக்கிரி ஆகிய கிராமங்களுக்கூடாக அச்சுவேலிக்குச் செல்லும் வீதி அமைகின்றது. இதனாலேயே இந்த வீதி ‚இராச வீதி‛ என்று அழைக்கப்படுகின்றது.

அக்காலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தை அரசாட்சி செய்த பரராஜசேகரனின் இளையமகனான பண்டாரம் மன்னனின் முதன் மந்திரியாக இருந்த அவரது மாமனாரான அரசகேசரி என்பவர் இந்த இராசவீதி வழியிலே ஒரு விசேடமான இடம் இருப்பதாகவும், அந்த இடத்தில் ஒரு தான் தோன்றியான தீர்த்தம் இருப்பதாகவும் கனவுகண்டார்.

அடுத்தநாளே அதைப்பற்றி ஆராயும் பொருட்டு தான் கனவுகண்டபடி குறிப்பிட்ட இடத்துக்குவந்து ஆராய்ந்தபோது தான் கண்ட கனவின்படி அங்கு புனிதமான அந்த நீரூற்றைக் கண்டு வியந்து அதிசயப்பட்டார். அந்த ஊற்றானதிலிருந்து
வெளிப்படும் தீர்த்தமானது அமிர்தம் போலவும், நல்லநீர்ப்பெருக்கோடும் இருப்பது கண்டு ஆனந்தப்பட்டார். இவ்வாறு தீர்த்த அமைப்புள்ள இடத்தில் சிவாலயம்
அமைப்பதே அரசமரபு எனக்கருத்திற்கொண்டு அப்புண்ணிய தீர்த்தத்தை திருமஞ்சனமாகக் கொண்டு ஒரு விநாயகப்பெருமானுக்குரிய ஆலயமும் சிவனுக்குரிய ஆலயமுமாக இரட்டை மூலஸ்தானம் கொண்டமைத்துப் பிரதிஷ்டை செய்தார். அரசகேசரி என்ற மந்திரியால் 16ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்
கப்பட்டதால் இவ்வாலயம் அரசகேசரிப் பிள்ளையார் கோயில் என வழங்கப்படலாயிற்று.

இவ்வாலயம் மிகவும் புராதனமான ஓர் ஆலயம் என்பதற்கு மிகப்பழைய புராதன ஆலயங்கள் என்ற பதிவேட்டில் இவ்வாலயத்தின் பெயரும் பதிவாகியுள்ளமை ஒரு சான்றாகும். போர்த்துக்கீசரின் வருகையை அடுத்து அக்காலத்தில் சைவக்கோயில்கள் அழிக்கப்பட்டதும், சைவ அநுட்டானங்கள்
ஒதுக்கப்பட்டதுமான ஒரு நிலை உருவானது. அந்தக்காலகட்டத்தில் இக்கோயிலும் பாதிக்கப்படலாமெனக்கருதி பயந்த ஊர்மக்கள் பிரதிஷ்டை பண்ணப்பட்ட விக்கிரகத்தை திருமஞ்சனக்கிணற்றுக்குள் மறைத்து வைத்தார்கள். பின்னர் குறித்த கிணற்றிலிருந்து விக்கிரகம் எடுக்கப்படும்போது பிள்ளையாரின் தும்பிக்கை சேதமுற்றிருந்ததுஎனவும் ஒரு கதை உண்டு.
தற்போது இவ்வாலயத்தில் புதிதாகத் தருவிக்கப்பட்ட விநாயகர் விக்கிரகமே பிரார்த்தனைக்கு உண்டு. புராதனம் மிக்க இவ்வாலயத்தை 1800ஆம் ஆண்டு தொடக்கம் நீர்வேலி யைச் சேர்ந்த கதிர்காமர் ஐயம்பிள்ளை என்பவர் பரிபாலித்து
வந்திருக்கிறார்.

  • 1873 கார்த்திகை 26ஆந் திகதி பிரசித்தநொத்தாரிஸ் வே. சங்கரப்பிள்ளை முன்னிலையில் ஆலயத்தின் பரிபாலனப் பொறுப்பு சுவாமிநாதக்குருக்களின் மகன் இராமசாமிக்குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
  • 1904ஆம் ஆண்டு பங்குனி 7ஆந் திகதி பிரசித்தநொத்தாரிஸ் சங்கரப்பிள்ளை முகதாவில் 7 பேரடங்கிய குழுவினரால் பராமரிப்புத்தத்துவம் ஒன்று எழுதப்பட்டது.
  • 1906 ஆம் ஆண்டு ஆவணி மாதம் கோயிலின் பூசகர் சுவாமிநாதக் குருக்களின் மகன் இராமசுவாமிக் குருக்களுக்குப் பராமரிப்புத் தத்துவம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.
  • 1949 இல் இருந்து புதிய சகாப்தம் உருவானது. பேரைக் கொண்ட தர்மகர்த்தாசபை உருவாக்கப்பட்டது. அதன்பின் தர்மகர்த்தாசபை உறுப்பினர் தொகை 12ஆக அதிகரிக்
    கப்பட்டது.
  • 1986இல் 21 உறுப்பினர்களைக் கொண்ட பரிபாலனசபை ஒன்று உருவாக்கப்பட்டது. இன்னும் காலத்துக்குக்காலம் குறிப்பிட்ட திருப்பணி
    கள் செய்து நிறைவேற்றப்படுவதற்கு திருப்பணிச்சபைகளும் நிறுவப்பட்டன.

இவ்வாலயத்தில் மூலமூர்த்தியாகப் பின்ளையாரும் அதற்கொப்ப சிவன், அம்மன் மூர்த்தங்களும், மற்றும் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதேவசேனா சமேத முருகப்பெருமானும், நவக்கிரகமும், தெட்சணாமூர்த்தியும், துர்க்காதேவியும், சண்டேசுவரர் ஆலய
மும், ஸ்தம்ப பிள்ளையார், சந்தான கோபாலர், நாகதம்பிரான் ஆகிய மூர்த்தங்களுக்கும் தனித்தனி சந்நிதானம் அமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவ்வாலயத்தின் வடக்கு பக்கத்தில் நந்தவனமும் தெற்குப் பக்கத்தில் தீர்த்தக்கேணியும் அழகிய மண்டபமும் அமைந்துள்ளமை ஆலயச்சிறப்பிற்கு மேலும் மெருகூட்டுவதாக அமைந்துள்ளனவாகும்.

27.01.1964இல் ஆரம்பிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டு ஏகாம்பரம் சிற்பாசாரியர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டதே பிள்ளையாருக்குரிய அழகிய சித்திரத் தேராகும். இன்னும் தேர்க்கொட்டகையும் அமைக்கப்
பட்டதோடு முருகப்பெருமானுக்குரிய சித்திரத்தேர் 1992இல் உள்ளூர் சிற்பாசாரியர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டதோடு 3ஆவது சித்திரத்தேராக சண்டேஸ்வரப்பெருமானுக்கும் ஒரு சிறிய சித்திரத்தேர் உருவாக்கப்பட்டது. 1994இல் முருகப்பெரு மானின் தேர்க்கொட்டகையும் அமைக்கப்பட்டது.

இவ்வாலய நித்திய, நைமித்திய கைங்கரியங்களைப் பரம்பரை
பரம் பரையாக சிவஸ்ரீ கார்த்திகேச, சாம்பசதாசிவக் குருக்களும் அவர் புத்திரர் சோமதேவாக் குருக்களும் வேதாகம முறைப்படி செய்து வருவது சிறப்புடைத்தாகும்.

இவ்வாலயத்தின் வருடாந்த மகோற்சவம், ஆவணிப்பௌர்ணமியைத் தீர்த்தோற்சவமாகக் கொண்டு முதல்நாள் தேர்த் திருவிழாவும் அதற்கு முதல் ஒன்பது நாள் மகோற்சவமும் நடைபெறுவதோடு பூங்காவன உற்சவமும் நடைபெறு
வது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவராத்திரி திருவெம்பாவை, நவராத்திரி
என்பனவும் மாதாந்த சதுர்த்தி திருவிழாக்களும், புரட்டாதிச் சனி நவக்கிரக அபிஷேகம், ஐப்பசி வெள்ளி, கார்த்திகைச் சோமவாரம், திருக்கார்த்திகை ஆனி உத்திரம், ஆவணி மூலம் என்பனவற்றிற்கு உற்சவங்களும், பிள்ளையார் கதை, கந்த
புராண படனம், பெரியபுராணம், திருவாதவூரடிகள் புராண படனம் என்பனவும், காலத்துக்குக் காலம் சமய பிரசங்கங்களும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. வருடந்தோறும் விநாயகர் சஷ்டிக்கு 21 நாளும் பெருங்கதைப்படிப்பும்,
லட்சார்ச்சனையும் நடைபெற்று வருகின்றது. விநாயகர் சஷ்டி இறுதிநாளில் கஜமுகன் போர் நடைபெறுகின்றது. மகடாசூர சம்மாரத்திற்காக விநாயகப் பெருமான்
மாசுவன் ஸ்ரீ மீனாட்சி அம்பாள் கோயிலுக்கு எழுந்தருளி வருவது கிராமத்துக்கே பெருமைதரும் ஒரு நிகழ்வாகும்.

மேலும் இவ்வாலயத்தில் வளர்பிறைச் சதுர்த்தி உற்சவம் மட்டுமன்றி அபரபக்க சங்கட சதுர்த்திக்கும் மாதந்தோறும் இரு சதுர்த்திவிழாக்கள் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்.

இன்னும் இலங்கைக்கு வருகை தந்த தமிழக கலைஞர்கள் கே.பி. சுந்தராம்பாள், காரைக்குறிச்சி அருணாசலம், கி.வா. ஜெகநாதன், குன்றக்குடி அடிகளார் போன்றோர் வருகைதந்ததும் சிறப்பு அம்சங்களாகும்.

1995இல் குடமுழுக்குக்கண்ட இக்கோவிலுக்கு பஞ்சதள இராஜகோபுரம் அமைக்கப்பட்டதோடு மேலும் திருப்பணிகள் செய்யப்பட்டு 12.06.2011இல் புனரா
வர்த்தன கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் ஆலய முன்றலில் தேர்முட்டிக்குக் கிழக்கே அரசகேசரியின் சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. ஆலயத்தின் முகப்பு அழகிய வில்லுமண்டபமாக அமைக்கப்பட்டு 2012இல் குடமுழுக்கு
செய்யப்பட்டது சிறப்பம்சமாகும்.

தினமும் மூன்று காலப்பூசை, ஆவணிச் சதுர்த்திக்கு அடுத்தநாள் கொடியேறிப் பன்னிரண்டு தினங்கள் மகோற்சவம் நடைபெறும். மாதச் சதுர்த்தி, பிள்ளையார் கதை, சோமவாரம் போன்ற விசேட காலங்களில் விசேட பூசைகள் நடைபெறும். கந்தபுராண படனம் நடைபெறுவதுடன் கோவில் மடத்தில் அறுபத்திமூன்று நாயன்மார் குருபூசையும், அன்னதானமும் நடைபெற்று வருகின்றன. நாமும் விநாயகரின் பேரருளுக்கு பிரார்த்திப்போமாக.

இவ்வாலயத்தைப் பற்றி அரசாங்கப் பதிவேட்டில்

  • உள்ள விபரம்: ஆலயம் கட்டப்பட்ட காலம் : 1792
  • ஆலயப் பெயர் : அரசகேசரிப்பிள்ளையார்கோயில்
  • இருக்குமிடம் : நீர்வேலி தட்டுப்பகுதி (காணிப் பெயர்)
  • யாரால் கட்டப்பட்டது: அவ்வூர் மக்களால் கட்டப்பட்டது.
  • இப்போ நிர்வகிப்பவர் : குமருப்பிள்ளை சுவாமிநாத சிவு
  • விழா நடைபெறும் மாதம், விபரம் : ஆவணி 9 நாட்கள் சுவாமியைக் காவி வீதிவலம் வருதல். ஒரு நாள் தேர்.

(இந்துசமய திணைக்களத்தால் 1984இல் வெளியிடப்
பட்ட இலங்கைத் திருநாட்டின் இந்துக் கோயில்கள் என்னும்
பதிவேட்டில் உள்ளது)

தினமும் மூன்று காலப்பூசை உண்டு. ஆவணிச் சதுர்த்திக்கு அடுத்த நாள் கொடியேறிப் பன்னிரண்டு தினங்கள் மகோற்சவம் நடைபெறும். மாதச் சதுர்த்தி, பிள்ளையார் கதை, சோமவாரம் போன்ற விசேட காலங்களில் விசேட பூசைகள்
நடைபெறும். கந்தபுராண படனம் நடைபெறுவதுடன் கோவில் மடத்தில் அறுபத்திமூன்று நாயன்மார் குருபூசையும், அன்னதானமும் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலயம் அரசகேசரி மன்னனால் ஸ்தாபிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.